பணியிடங்களில் பாலியல் தொல்லை  கொடுப்பவர்களுக்கு கருணை காட்ட முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு

பணியிடங்களில் பாலியல் தொல்லை கொடுக்கும் நபர்களுக்கு எந்த காரணத்துக்காகவும் கருணை காட்ட முடியாது என உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்துள்ளது. 
பணியிடங்களில் பாலியல் தொல்லை  கொடுப்பவர்களுக்கு கருணை காட்ட முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு


பணியிடங்களில் பாலியல் தொல்லை கொடுக்கும் நபர்களுக்கு எந்த காரணத்துக்காகவும் கருணை காட்ட முடியாது என உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்துள்ளது. 
 சென்னையை அடுத்துள்ள பூந்தமல்லியில் உள்ள தனியார் பாய்லர் தொழிற்சாலையில் வெல்டராக பணிபுரியும் கண்ணன் என்பவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த தொழிற்சாலையில் பணிபுரிந்த பெண் பணியாளர் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய ஆலை நிர்வாகம் கண்ணனை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது. 
இந்த உத்தரவை எதிர்த்து கண்ணன் தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தொழிலாளர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட பெண் பணியாளர், தான் கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுவிட்டதால், கண்ணனை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து ஆலை நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. 
இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குடும்ப நிர்பந்தத்தின் காரணமாக பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட பெண் தான் கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுள்ளார். அந்தப் பெண் புகாரை வாபஸ் பெற்றுவிட்டார் என்ற காரணத்துக்காக குற்றம்சாட்டப்பட்டுள்ள மனுதாரரை வழக்கில் இருந்து விடுவிப்பது  தவறான முன் உதாரணமாகிவிடும். எனவே மனுதாரரை மீண்டும் பணியில் சேர்க்கும்படி தொழிலாளர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மேலும் பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி கொடுப்பது அந்த நிறுவனங்களின் கடமையாகும். அதே போன்று உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள விசாகா குழு பரிந்துரைகளையும் நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை என்பது வெட்கக்கேடான மனித உரிமை மீறல். எனவே, பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் நபர்களுக்கு எந்தக் காரணமும் கொண்டு கருணை காட்ட முடியாது என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com