மரபு விதைகளை நோக்கி பயணிக்கும் விவசாயிகள்...!

இயற்கை விவசாயத்தை முன்னிறுத்தி, ஆங்காங்கே நடைபெறும் பாரம்பரிய நாட்டு விதை திருவிழாக்கள் இயற்கை விவசாயிகளை வெகுவாக கவர்ந்துள்ளன. 
மரபு விதைகளை நோக்கி பயணிக்கும் விவசாயிகள்...!

பெரம்பலூர்: இயற்கை விவசாயத்தை முன்னிறுத்தி, ஆங்காங்கே நடைபெறும் பாரம்பரிய நாட்டு விதை திருவிழாக்கள் இயற்கை விவசாயிகளை வெகுவாக கவர்ந்துள்ளன. 

நமது முன்னோர்கள் மண்ணின் தன்மைக்கேற்ப நாட்டு விதைகளைப் பயன்படுத்தி விவசாயம் செய்ததன் மூலம் கிடைத்த உணவுப் பொருள்களை உண்டு, அனைத்துத் தரப்பு மக்களும் நோய்களின்றி நீண்ட நாள் வாழ்ந்தனர். பின்னர், மரபு மாற்றப்பட்ட விதைகளைப் பயிரிட்டு, கூடுதல் மகசூல் கிடைப்பதற்காக ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை விவசாயிகள் பயன்படுத்தினர். இதன் விளைவு அதிக விளைச்சலும், உரிய லாபமும் கிடைத்தாலும் அதை உட்கொண்டவர்கள் பல்வேறு விதமான நோய்களால் பாதிக்கப்பட்டனர். பாரம்பரிய விதைகளையும், உணவுப் பழக்க, வழக்கங்களையும் மறந்ததே இதற்கு பிரதான காரணமாகும். இவற்றை உணர்ந்து, தற்போது இயற்கை உணவு வகைகளையும், பாரம்பரிய சாகுபடியையும் தேடி பயணித்துக் கொண்டிருக்கிறோம். 

பாரம்பரிய விவசாயத்தில், தொழு உரத்தால் உருவான வளமான மண், வீரியம் மிக்க நாட்டு விதைகளால் விவசாயமும், விவசாயிகளும் செழிப்பாகவே இருந்தனர். கடந்த சில ஆண்டுகளாக பாரம்பரிய விவசாயத்தைக் கைவிட்டதால், பெரும்பாலான விவசாய நிலங்கள் ரசாயன உரங்களால் அதன் தன்மையை இழக்கத் தொடங்கின. அத்துடன், பல தொழிற்சாலைகளின் பெருக்கத்தால் பாசனத்துக்கான நிலத்தடி நீரும் பாழடைந்து வருகிறது. 

நமது முன்னோர், ஒவ்வொரு பயிரிலும், முளைக்கும் மண்ணின் தன்மைக்கேற்பவும், பருவ காலத்துக்கேற்ற விதைகளின் மரபுகளைக் கண்டறிந்து, அவற்றை அந்தந்த ஊரின் பெயரிலும், உருவத்தின் பெயரிலும் வகைப்படுத்தி வைத்திருந்தனர். 

இதில், பெரும்பாலான விதைகள் தற்போது வழக்கத்தில் இல்லை. அந்நிய மோகத்தால் பாரம்பரியம் மிக்க, வளமான நாட்டு விதைகளை வேகமாக இழந்துவிட்டோம் என்னும் நிலையில், தற்போது நாட்டு விதைகளைக் கண்டறிதல், உற்பத்தி, தேர்வு, பரவலாக்குதல், சாகுபடி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் சில இயற்கை விவசாயிகளும், ஆர்வலர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

வரவேற்கப்படும் இயற்கை விவசாயம்: நாம் உட்கொள்ளும் உணவுகள் நஞ்சாக மாறும் இச் சூழலில், பாரம்பரிய இயற்கை விவசாயம் மீதான ஆர்வமும், நஞ்சில்லா உணவுப் பொருள்கள் மீதான தேடலும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இதனால், இயற்கை முறையில் சாகுபடி செய்யப்படும் தானியங்களுக்கும், காய்கறிகளுக்கும் நகர்ப்புற மக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, இயற்கை வேளாண்மை மேற்கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 

இதை கருத்தில்கொண்ட இயற்கை விவசாயிகளும், ஆர்வலர்களும் ஒன்றிணைந்து, ஆங்காங்கே பாரம்பரிய விதைத் திருவிழாக்களை நடத்தி, இயற்கை வேளாண் இடுபொருள்கள், விளைபொருள்கள் குறித்து இளம்தலைமுறை விவசாயிகளுக்கு அறிவூட்டுதல், நாட்டு விதைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், இயற்கை உழவர்கள் பட்டறிவுப் பகிர்வு முகாம்களை நடத்தி வருகின்றனர். இதன்மூலம் நமது பாரம்பரிய விதைகள் பரவலாக்கப்படுவதோடு, இயற்கை விவசாயிகளையும், பட்டதாரி இளைஞர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

""இயற்கை வேளாண்மையும், சிறுதானியங்களும் நமக்குப் புதிதல்ல. விதை திருவிழாக்கள் மூலம் இயற்கை விவசாய ஆர்வலர்களுக்கான சந்திப்புகளை, புதிய யுக்திகளை கிராமப்புறங்களில் நடத்துவது இயற்கை வேளாண்மையை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்திச் செல்லும் என்பதில் ஐயமில்லை'' சூழலியலாளரும், தமிழ்க்காடு இயற்கை வேளாண்மை இயக்க ஒருங்கிணைப்பாளருமான ரமேசு கருப்பையா கூறியது: 

கடந்த 2016 -ஆம் ஆண்டு முதல் பெரம்பலூர், அரியலூர், விருத்தாச்சலம், தொழுதூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் விதைத் திருவிழாக்கள் நடத்தியுள்ளோம். தற்போதைய காலகட்டத்தில் விவசாயிகளிடம் விதைகள் இல்லை. இதனால், ஒவ்வொரு பருவத்தின்போதும் விதைகளை விலைக்கு வாங்குகின்றனர். இதை கருத்தில் கொண்ட தனியார் நிறுவனங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். 

உதாரணமாக, பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. ஒரு விவசாயி சுமார் ரூ. 4 ஆயிரம் முதல் ரூ. 5 ஆயிரத்துக்கு விதைகளை வாங்குகிறார். அதோடு மட்டுமின்றி, உரம், பூச்சிக்கொல்லி என மொத்தமாக ஆண்டுக்கு சுமார் ரூ. 50 கோடிக்கு மேல் விவசாயிகள் செலவழிக்கின்றனர். இதனால், நாட்டு விதைகளை மீட்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். 

தற்போது விற்பனை செய்யப்படும் அனைத்து விதைகளும் ஹைபிரீட் விதைகளாகும். இதற்கு அதிகமான உரங்களும், பூச்சிக்கொல்லி மருந்துகளும், தண்ணீரும் தேவைப்படும். நாம், ஏற்கெனவே பயன்படுத்திய விதைகள் நாட்டு, பாரம்பரிய விதைகளாகும். இவை, இயற்கையாக உருவான விதைகள் என்பதால் வறட்சி, அதிக வெள்ளம், பூச்சி தாக்குதல் என அனைத்து சூழல்களுக்கும் ஏற்றவை. இவற்றை மீண்டும், மீண்டும் பயிரிடுவதால் பூச்சிக்கொல்லியோ, உரங்களோ தேவைப்படாது. மரபு விதைகளை நம்பியே எதிர்காலம் உள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com