சர்வதேச கடத்தல் கும்பல் ஊடுருவல்: தமிழகத்தில் காவல்துறை கண்காணிப்பு தீவிரம்

சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் ஊடுருவியிருக்கலாம் என எச்சரிக்கை விடப்பட்டதால், தமிழகத்தில்  காவல்துறையினரின் கண்காணிப்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் ஊடுருவியிருக்கலாம் என எச்சரிக்கை விடப்பட்டதால், தமிழகத்தில்  காவல்துறையினரின் கண்காணிப்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
 இது குறித்த விவரம்: ஈராக் நாட்டின் பாக்தாத்தில் உள்ள ஒரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 15 பேர் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் அங்கிருந்து தப்பியோடினர். 
இந்தச் சம்பவத்தில் 12 பேர் உடனடியாக அந்த நாட்டின் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். ஆனால் 3 பேரும் தலைமறைவாகவே இருந்து வருகின்றனர்.இந்நிலையில், சர்வதேச காவல்துறை (இன்டர்போல்)  இந்திய உள்துறைக்கு எச்சரிக்கையை விடுத்தது. 
அதில் பாக்தாத்தில் இருந்து தப்பியோடிய சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த அல் லம்பி குஹா, அல் ஷாவ்லி சதீக் ஆகியோர் கடல் வழியாக குஜராத், தமிழகம் மாநிலங்களுக்கு தப்பி வந்திருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும்  கூறப்பட்டிருந்தது.  இதில் சர்வதேச போலீஸார், அந்த இரு நபர்களுக்கும்ஆரஞ்சு வண்ண நோட்டீஸும்  விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து மத்திய உளவுத்துறை, தமிழக காவல்துறைக்கு இது தொடர்பான எச்சரிக்கையை விடுத்தது. இந்த  எச்சரிக்கையை அடுத்து , தமிழகம் முழுவதும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 
பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மார்க்கெட்டுகள், கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
அதேபோல முக்கியமான சாலை சந்திப்புகள், சோதனைச் சாவடிகள் ஆகியவற்றில் தீவிர வாகனச் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. 
இதில் அந்த இரு நபர்களின் புகைப்படங்களைக் கொண்டு,  அடையாளம் கண்டு பிடிப்பதற்குரிய முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு: 
கடலோரப் பகுதிகளிலும் போலீஸார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 
இங்கு 24 மணி நேரமும் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும், கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களிடம், போலீஸார் கடலில் சந்தேகத்துக்குரிய வகையில்  எவரேனும் கள்ளப்படகு மூலம் சென்றால் அவர்கள் குறித்த தகவலை உடனே தெரிவிக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர். 
மத்திய உளவுத்துறை கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக ஏற்கனெவே எச்சரிக்கை விடுத்ததுள்ளதையடுத்து, தமிழகத்தில் பாதுகாப்பு  பலப்படுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com