தொல்காப்பியத்திலும் இசைக் குறிப்புகள் காணப்படுகின்றன: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

தொல்காப்பியத்திலும் இசைக் குறிப்புகள் காணப்படுகின்றன என்றார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.
தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையத்தில் கலைகளின் சங்கமத் திருவிழாவை செவ்வாய்க்கிழமை குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். 
தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையத்தில் கலைகளின் சங்கமத் திருவிழாவை செவ்வாய்க்கிழமை குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். 


தொல்காப்பியத்திலும் இசைக் குறிப்புகள் காணப்படுகின்றன என்றார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையத்தில் புதுதில்லி சங்கீத நாடக அகாதெமி, தென்னகப் பண்பாட்டு மையம் ஆகியவற்றின் சார்பில் செவ்வாய்க்கிழமை மாலை இசை, நடனம், நாடகம், பொம்மலாட்டம், நாட்டுப்புற,  பழங்குடியினர் கலைகளின் சங்கம திருவிழாவைத் தொடங்கி வைத்த அவர் மேலும் பேசியது:

இசையானது உலகம் முழுவதும் மனதுக்கு அமைதியையும்,  ஊக்கத்தையும் அளிக்கிறது. இதில், இந்திய கலாசார வெளிப்பாடு ஒருபடி மேலே சென்று ஆன்மாவையும் ஈர்க்கிறது. குறிப்பாக தமிழ்நாடு,  செவ்வியல் மரபுகள் மட்டுமல்லாமல், மிகவும் வளமைமிக்க நாட்டுப்புற, பழங்குடியின, பக்தி பாடல்களின் களஞ்சியமாகத் திகழ்கிறது. 

தமிழ் இசையின் பாரம்பரியம் பண்டைய தமிழ் வரலாற்றுச் சகாப்தம் வரை செல்கிறது. சங்க இலக்கிய நூல்களில் இசைப் பாரம்பரியம் குறித்த பல்வேறு குறிப்புகள் காணப்படுகின்றன. பண்டைய இலக்கண நூலான தொல்காப்பியத்தில் ஐந்திணை தொடர்புடைய பல்வேறு இசைக் குறிப்புகள் காணப்படுகின்றன.
சங்க காலத்துக்குப் பிந்தைய தமிழ் இசை மாறுபட்ட நுட்பங்களுடன் உருவாகிறது. சிலப்பதிகாரமானது, மேடையில் இசை, நடனம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை அடிப்படை தர்க்க முறை, அறிவியல் ரீதியான கணக்கீடுகள் உள்ளிட்டவற்றுடன் விவரிக்கிறது. சிலப்பதிகாரத்தில் இசை, நடனத்தின் பல்வேறு அத்தியாயங்கள் காணப்படுகின்றன. இதில், கோவலன்  மாதவி இணையின் காதல் இசை மிகவும் பிரபலமானது.

ஆறாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் அப்பர் போன்ற சைவக் குரவர்கள், பெரியாழ்வார் போன்ற வைணவப் பெரியார்கள்  கோயில்களில் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளனர். இந்தத் தமிழிசையின் பாரம்பரியம் இசைக் கவிஞரான அருணகிரிநாதரின் தமிழ்ப் பாடல்கள் மூலம் மேலும் மெருகூட்டப்பட்டது. 
இவர்களுடைய இசையின் வெளிப்பாடுகளால் பக்தியும், தெய்வீகமும் வளர்ச்சி அடைந்தன. இப்போதும் இவர்களுடைய பாடல்களை மேடையில் இசைக்கும்போது,  அந்த தெய்வீகத்தை உணர முடிகிறது. 

இந்தக் கலைகளைக் கலைஞர்கள், கலை நிறுவனங்கள் மேலும் மேம்படுத்த முன்வர வேண்டும் என்றார் பன்வாரிலால் புரோஹித்.
முன்னதாக, சிறப்புக் குழந்தைகளுக்கான கலாசார பாதுகாப்பு மையத்தை ஆளுநர் திறந்து வைத்தார். 
விழாவில் வேளாண்மைத் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு, மாநிலங்களவை உறுப்பினர் ஆர். வைத்திலிங்கம்,  ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, புதுதில்லி சங்கீத நாடக அகாதெமி தலைவர் சேகர் சென், செயலர் ரீட்டா சுவாமி செளத்ரி, சென்னை தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி, தென்னகப் பண்பாட்டு மைய இயக்குநர் எம். பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com