3 மாதங்களில் வேலைவாய்ப்பகங்களில் 3.91 லட்சம் பேர் பதிவு: அரசு புள்ளி விவரங்களில் தகவல்

தமிழகத்தில் மூன்று மாதங்களில் அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 3.91 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். அதன்படி, இதுவரை அரசு வேலைவாய்ப்புக்காக பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 76 லட்சத்து


தமிழகத்தில் மூன்று மாதங்களில் அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 3.91 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். அதன்படி, இதுவரை அரசு வேலைவாய்ப்புக்காக பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 76 லட்சத்து 76 ஆயிரத்து 907 ஆக உள்ளது.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப் படிப்புகளை முடிக்கும் மாணவ-மாணவிகள் அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தங்களது பெயர்களையும், படிப்பையும் பதிவு செய்து வருகின்றனர். இணையதள முறை மூலமாக இதற்கான செயல்பாடு எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. 
அரசு அலுவலகங்கள், அரசுத் துறைகளில் ஏற்படும் காலிப் பணியிடங்கள் வேலைவாய்ப்பகங்களில் செய்யப்பட்டுள்ள பதிவு மூப்பின் அடிப்படையில் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஒவ்வொரு ஆண்டும் வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தேர்வாணையத்தில் போட்டித் தேர்வுகளை எழுதும் அதே வேளையில், சில நேரடி அரசுப் பணி நியமனங்கள் என்பது வேலை வாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் இருக்கும் என்பதால் அதில் பதிவு செய்வதற்கு பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், ஒவ்வொரு ஆண்டும் இதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மூன்று மாதங்கள் எண்ணிக்கை: கடந்த மே மாதம் 31-ஆம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்தோரின் எண்ணிக்கை 72 லட்சத்து 85 ஆயிரத்து 444 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை ஆகஸ்ட் 31-ஆம் தேதியன்று நிலவரப்படி 76 லட்சத்து 76 ஆயிரத்து 907 ஆக உயர்ந்துள்ளது.
பள்ளி மாணவ-மாணவிகள்: வேலைவாய்ப்பக பதிவு எண்ணிக்கை மூன்று மாதங்களில் 3 லட்சம் அளவுக்கு உயர்ந்ததற்கு காரணம் 18 வயதுக்குக் குறைவான பள்ளி மாணவ-மாணவிகள் அதிகளவு பெயர்களைப் பதிவு செய்ததுதான். கடந்த மே 31-ஆம் தேதி நிலவரப்படி 18 வயதுக்கு உட்பட்டவர்கள் 15 லட்சத்து 20 ஆயிரத்து 269 பேர் பதிவு செய்திருந்தனர். ஆகஸ்ட் மாத நிலவரப்படி 19 லட்சத்து 91 ஆயிரத்து 681 பேர் பதிவு செய்துள்ளனர். அதேசமயம், 36 வயது முதல் 57 வயதுள்ள பதிவுதாரர்களின் எண்ணிக்கை மே மாதம் 11 லட்சத்து 77 ஆயிரத்து 973 ஆக இருந்தது. அவர்களில் சுமார் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பகங்கள் மூலமாக அரசு வேலை அளிக்கப்பட்டுள்ளன. 
இதனால், இப்போது மொத்த எண்ணிக்கையானது 11 லட்சத்து 73 ஆயிரத்து 38 ஆகக் குறைந்துள்ளது. இதேபோன்று, 24 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டோரின் மொத்த பதிவு எண்ணிக்கையும் குறைந்துள்ளது. கடந்த மே மாதம் 27 லட்சத்து 44 ஆயிரத்து 132 ஆக இருந்த எண்ணிக்கை இப்போது 26 லட்சத்து 32 ஆயிரத்து 231 ஆகக் குறைந்துள்ளது.
18 வயதுக்கு உட்பட்ட மாணவ-மாணவிகளின் பதிவு எண்ணிக்கை உயர்ந்துள்ள அதேசமயம், 24 முதல் 57 வயது வரையுள்ள நபர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com