பொருளாதார மந்தநிலையா? குடும்பப் பிரச்னையா? பெண் தொழிலதிபர் மரணத்தில் எழும் சந்தேகங்கள்!

சென்னையைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் ரீட்டா (49) நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன.
பெண் தொழிலதிபர் ரீட்டா (49)
பெண் தொழிலதிபர் ரீட்டா (49)


சென்னை: சென்னையைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் ரீட்டா (49) நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன.

ரீட்டா - லங்காலிங்கம் தம்பதி, லேண்ஸன் குழுமத்தின் புகழ்பெற்ற டோயோட்டா டீலர்ஷிப்பை பெற்று தமிழகம் முழுவதும் ஏராளமான ஷோரூம்கள் மற்றும் சேவை மையங்களை நடத்தி வந்தனர். அந்த நிறுவனத்தின் நிர்வாகியாகி ரீட்டாவின் கணவர் லங்காலிங்கம் முருகேசு இருந்தார்.

இந்த நிலையில், கார் விற்பனை குறைவு,  தொழிலில் ஏற்பட்ட நலிவு காரணமாக ரீட்டா தனது அலுவலகத்தில் உள்ள அனைத்து மேலாளர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அப்போது மேலாளர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதை கணவர் தட்டிக் கேட்டுள்ளார். மேலாளர்கள் முன்னிலையில் தன்னை கணவர் திட்டியதால் தம்பதிக்குள் சண்டை ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

இதனால் ரீட்டா அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வந்துள்ளார். இரவு கணவர் லங்கா லிங்கம் வீட்டுக்கு வந்த போது அவரை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்ததால், அவர் சென்னையில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் தங்கியுள்ளார்.  இந்த நிலையில் மனமுடைந்த ரீட்டா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எனவே, பொருளாதார மந்தநிலையால் மனம் உடைந்து இவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது குடும்பப் பிரச்னை காரணமாக தற்கொலை நிகழ்ந்ததா என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகிறார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் நேற்று கூறப்பட்டதாவது:
சென்னை கோயம்பேட்டில் உள்ள லேன்சன் டொயோட்டா கார் ஷோரூம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் லங்கா லிங்கம். இவரது மனைவி ரீட்டா லங்கா லிங்கம் (49) அதே நிறுவனத்தில் இணை இயக்குநராக இருந்தார்.  இவர்களுக்கு மகனும், மகளும் உள்ளனர்.  இதில் மகள் லாவண்யா சுவிட்சர்லாந்தில் வசித்து வருகிறார். மகன் லிவாஸ் திருமணமாகி சென்னையில் தொழிலை கவனித்து வருகிறார்.

ரீட்டா மற்றும் அவரது கணவர் லங்கா லிங்கம் சென்னை நுங்கம்பாக்கம், கோத்தாரி சாலையில் உள்ள பங்களா வீட்டில் வசித்து வந்தனர். இவர்களின் வீட்டின் மேற்பார்வையாளராக ஏசுபாதம் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் வியாழக்கிழமை காலை 9 மணியளவில் ரீட்டாவின் வீட்டுக்கு வந்தபோது ரீட்டாவின் அறை உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. கதவை தட்டியும் அவர் திறக்கவில்லை.

இதையடுத்து அறையின் உள்ளே பார்த்தபோது ரீட்டா மின்விசிறியில் தூக்கில் தொங்கினார்.  இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஏசுபாதம், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் சடலத்தை மீட்டு,  பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com