டெங்கு காய்ச்சல்: விழிப்புணர்வு ஏற்படுத்த  அரசு அறிவுறுத்தல்

டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அலுவலகங்களுக்கு வரும் பொது மக்கள் நன்கு அறியும் வகையில் காட்சிப்படுத்த தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. 


டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அலுவலகங்களுக்கு வரும் பொது மக்கள் நன்கு அறியும் வகையில் காட்சிப்படுத்த தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. 
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வுப் பணிகளில் தமிழக சுகாதாரத் துறையும், உள்ளாட்சித் துறையும் இணைந்து செயல்பட்டு  வருகின்றன. பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, காய்ச்சல் குறித்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
தண்ணீரை தேங்க விடாதீர்: நீர்த்தொட்டி, தேங்காய் ஓடு, குளிர்சாதனங்கள், டயர், வாளி, ஆட்டுக் கல் ஆகியவற்றில் தண்ணீரை தேங்க விடக் கூடாது எனவும், தேங்கியிருக்கும் தூய்மையான நீரிலும் கொசுக்கள் உற்பத்தியாவதாகவும் துண்டுப் பிரசுரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொசுப் புழு உற்பத்தியாகும் விதம் தொடர்பாகவும் மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அலுவலகங்களில் காட்சிப்படுத்தவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, கொசுப் புழு எப்படி உற்பத்தியாகிறது, அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உள்ளாட்சி அலுவலகங்களுக்கு வரும் மக்களுக்கு விளக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் நிலவேம்பு கசாயமும் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மழைக்காலம் நிறைவடையும் வரை இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று உள்ளாட்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நோய் அறிகுறிகள்: டெங்கு காய்ச்சல் குறித்த அறிகுறிகளையும் உள்ளாட்சித் துறை அலுவலர்கள் மக்களுக்கு விளக்கி வருகின்றனர். குளிர் காய்ச்சல், மூட்டு மற்றும் தசைகளில் கடுமையான வலி, தோலில் தடிப்புகள், தலைவலி ஆகியன டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com