சிறு தானிய உணவுகளை உண்டு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குங்கள்: முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல்

உடலுக்கு நன்மைகளை அளிக்கும் சிறு தானிய உணவு வகைகளை அதிகம் உண்டு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 
சென்னை தீவுத்திடலில்  மழைநீர் சேகரிப்பு, நெகிழி ஒழிப்பு மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தைத் தொடக்கி வைத்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. 
சென்னை தீவுத்திடலில்  மழைநீர் சேகரிப்பு, நெகிழி ஒழிப்பு மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தைத் தொடக்கி வைத்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. 


உடலுக்கு நன்மைகளை அளிக்கும் சிறு தானிய உணவு வகைகளை அதிகம் உண்டு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புகழ்பெற்று விளங்கும் உணவு வகைகள், அசைவ உணவுகள் ஆகியவற்றின் சங்கமமாக சென்னை தீவுத் திடலில் மதராசபட்டினம் விருந்து என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை, உணவு பாதுகாப்புத் துறை ஆகிய சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியை முதல்வர் பழனிசாமி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்துப் பேசியது:
உணவு இப்போது அலங்காரப் பொருளாக மாறிவிட்டது. வெவ்வேறு நாட்டின் உணவு வகைகளுக்கும், விதவிதமான சமையல் வகைகளுக்கும் நமது நாக்கு அடிமையாகி விட்டது. ஆனால், நாம் ஆரோக்கியமான வாழ்வு வாழ நமது முன்னோர்கள் உள்கொண்ட ஆரோக்கியமான சத்தான உணவுகளையே, உட்கொள்ள முன்வர வேண்டும். இந்தக் கருத்தைத்தான் தெய்வப் புலவர் திருவள்ளுவரும் வலியுறுத்தியுள்ளார்.
நாம் சாப்பிட்ட உணவு நன்கு செரித்தப்பின், நம் உடம்புக்கு ஏற்ற உணவை நன்கு அறிந்து பசியெடுத்த பிறகே உண்ண வேண்டும். இதை நாம் தவறாது கடைப்பிடித்தால் நோய்கள் நம்மை தீண்டாது.
இளம் வயதிலேயே நோய்: இன்றைய காலத்தில் இளம் வயதிலேயே ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இதய சம்பந்தப்பட்ட நோய் ஆகியன பெருகி வருகின்றன. இதற்கு நமது உணவுப் பழக்கமே காரணம். நமது முன்னோர்கள் பாரம்பரிய உணவு வகைகளான சாமை, கேழ்வரகு, தினை, குதிரைவாலி, சோளம், கம்பு போன்ற இதர சிறு தானியங்களை தினமும் உணவில் பயன்படுத்தியதோடு, அதற்கேற்ப உடல் உழைப்பை மூலதனமாகக் கொண்டு வாழ்ந்தனர். அன்றைக்கு அவர்களுக்கு ரத்த அழுத்தம், மாரடைப்பு, நீரிழிவு நோய் போன்றவை அரிதாக காணப்பட்டது.
அன்றாட வாழ்வில் பாரம்பரிய உணவுப் பழக்கத்தோடு உடற்பயிற்சியும் மேற்கொண்டு நாம் ஆரோக்கியமாக வாழ வேண்டும். உடற்பயிற்சி எவ்வாறு உடலை வலிமையாக்குகிறதோ, அதுபோன்றே மனதை புத்துணர்ச்சியாக வைக்க யோகா, தியான பயிற்சிகள் அவசியமாகின்றன.
வரகு, சாமை, சோளம், தினை, குதிரை வாலி போன்ற தானியங்களைச் சமைத்து உண்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்-கொழுப்பு சத்து குறையும். உடலுக்கு நல்ல ஊட்டச் சத்து கிடைக்கும். உடல் நலன் பாதுகாக்கப்படும். நமது முன்னோர்கள் வழங்கிச் சென்ற உணவு வகைகளை மீண்டும் உள்கொள்ளத் தொடங்கினால் அனைவரும் ஆரோக்கியமான உடல் நலத்தைப் பெறலாம். இதுபோன்ற உணவு வகைகளை உண்டு தமிழகத்தில் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி கேட்டுக் கொண்டார்.
முன்னதாக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை செயலாளர்  பீலா ராஜேஷ் வரவேற்றுப் பேசினார். 
உணவுகளை ருசித்த முதல்வர்: காட்சி அரங்கில் 160 வகையான உணவு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்குகளை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது, கருப்பட்டிக் காப்பி உள்ளிட்ட பாரம்பரிய உணவு வகைகளை அவர்கள் ருசித்துப் பார்த்தனர்.
அனுமதி இலவசம்
அரங்குகளில் பாரம்பரிய உணவு வகைகளில் இருந்து, தமிழக அரசின் மீன்வளர்ச்சிக் கழக அங்காடி, ஆவின், தனியார் நிறுவனங்களின் உணவுக் கடைகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. மரச்செக்கு எண்ணெய், பயறுகள், புட்டு, ஆவின் பால், திருநெல்வேலி அல்வா என சைவ உணவுகளுடன், மட்டன் சுக்கா, ஆம்பூர் பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி, விதவிதமான மீன் உணவுகள் என அனைத்து வகை உணவுகளும் இடம்பெற்றுள்ளன. ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் இந்த விருந்து திருவிழாவுக்குச் செல்ல நுழைவுக் கட்டணம் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com