இருமொழிக் கொள்கைதான் என்றும் நிலைத்திருக்கும்

இருமொழிக் கொள்கைதான் அதிமுக அரசின் நிலைப்பாடு; அதுவே என்றும் நிலைத்திருக்கும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், டி.ஜெயக்குமார் ஆகியோர் உறுதிபடத் தெரிவித்தனர்.
இருமொழிக் கொள்கைதான் என்றும் நிலைத்திருக்கும்

இருமொழிக் கொள்கைதான் அதிமுக அரசின் நிலைப்பாடு; அதுவே என்றும் நிலைத்திருக்கும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், டி.ஜெயக்குமார் ஆகியோர் உறுதிபடத் தெரிவித்தனர்.
சென்னை சாந்தோமில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு அவர்கள் இருவரும் கூட்டாக அளித்த பேட்டி:-
கே.ஏ.செங்கோட்டையன்: மொழிக் கொள்கை விஷயத்தில் அரசின் நிலைப்பாட்டை பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் சந்திக்கும் போது முதல்வரே எடுத்துக் கூறியுள்ளார். இருமொழிக் கொள்கைதான் எங்கள் நிலைப்பாடு. கடந்த 1968-ஆம் ஆண்டு அண்ணா முதல்வராக இருக்கும்போது இரு மொழிக் கொள்கை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  எங்களைப் பொறுத்தவரை இருமொழிக் கொள்கைதான் நிலைப்பாடு. மத்திய அரசின் நவோதயா பள்ளிகளே நமது தமிழகத்தில் இல்லை. அதுபோன்ற பள்ளிகள் இருந்தால்தான் மத்திய அரசின் அனுமதியுடன் ஹிந்தி திணிக்கப்படும். அப்படி ஏதும் நடைபெறவில்லை. தமிழும், ஆங்கிலமும் இருக்க வேண்டும் என்பதுதான் எங்களது நிலைப்பாடு. அதைத்தான் நாங்களும் வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம்.
டி.ஜெயக்குமார்: தமிழகம் பிரத்யேக மாநிலமாகும். இருமொழிக் கொள்கையானது முன்பிருந்தே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எதிர்காலத்திலும் அதுவே பின்பற்றப்படும். மக்கள் விரும்பாத எந்த மொழியும் இங்கே ஏற்றுக் கொள்ளப்பட்டதில்லை. இதைத்தான் நாங்களும் பின்தொடர்வோம். தமிழகத்தில் 1965-இல் ஹிந்தியை காங்கிரஸ் கட்சியினர் திணித்தார்கள். 
அதன்பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் எழும்பவே இல்லை. இதன்பிறகு இருமொழிக் கொள்கைதான் எங்களது நிலைப்பாடு என்பதில் உறுதியாக உள்ளோம். திமுகவைக் காட்டிலும் தமிழ் மொழியைக் காத்தது அதிமுக. ஹிந்தி மொழி மக்கள் ஏற்றுக் கொள்ளாத விஷயம். எங்களது முன்னோடிகளான எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் காட்டிய வழியில் இருமொழிக் கொள்கை என்பதையே எங்களது நிலையாகக் கொண்டிருக்கிறோம் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com