நெடுஞ்சாலை மதுக்கடைகளை மூட வேண்டும்: ராமதாஸ்

சாலை விபத்துகளைக் குறைக்க வேண்டும் என்று மத்திய நெடுஞ்சாலைத் துறைக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பாமக
பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ்

சாலை விபத்துகளைக் குறைக்க வேண்டும் என்று மத்திய நெடுஞ்சாலைத் துறைக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ச.ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

மோட்டார் வாகனச் சட்டங்களில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களின்படி விதி மீறல்களுக்கான கட்டணம்  20 மடங்குக்கும் கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 
தில்லியில் ரூ.15 ஆயிரம் மட்டுமே மதிப்புள்ள இரு சக்கர வாகனத்துக்கு ரூ.23 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அதிகமாக சரக்கு ஏற்றி வந்த லாரிக்கு ரூ.2 லட்சத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது போன்ற நிகழ்வுகள் இந்தச் சட்டத் திருத்தத்தின் நோக்கத்தை கேள்விக்குறியாக்கியுள்ளன. 

அபராதமாக அதிகத் தொகையை விதிப்பதால் மக்களுக்கு சில பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் கூட, ஒரு சாலை விபத்து கூட நடக்கக் கூடாது என்ற இலக்கை எட்ட இந்த நடவடிக்கைகள் அவசியமாகும். 

அதேநேரத்தில் இந்த நடவடிக்கைகள் மட்டுமே சாலை விபத்துகளைக் குறைப்பதற்கு போதுமானதல்ல. அபராதம் விதிப்பது உள்ளிட்ட செயல்களால் எந்த அளவுக்கு சாலை விபத்துகளும் உயிரிழப்புகளும் கட்டுப்படுத்தப்படுமோ, அதை விட அதிக எண்ணிக்கையிலான விபத்துகளையும், உயிரிழப்புகளையும் நெடுஞ்சாலையோர மதுக்கடைகளை மூடுவதன் மூலம் கட்டுப்படுத்த முடியும்.
தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டிருந்த 3,321 மதுக்கடைகளையும்,  தேசிய அளவில் 90 ஆயிரம் மதுக்கடைகளையும் பல ஆண்டுகள் சட்டப்போராட்டம் நடத்தி 2017-ஆம் ஆண்டில் மூட வைத்தது பாமக. இதனால் தமிழகத்தில் சாலை விபத்துகளும் உயிரிழப்புகளும் வெகுவாகக் குறைந்தன. இதன்மூலம் மதுக்கடைகளை மூடுவதால் சாலை விபத்துகளைக் குறைக்க முடியும் என்பது உறுதியாகிறது.

எனவே, மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்து அமைச்சகத்துக்கு உண்மையாகவே விபத்துகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற அக்கறை இருந்தால், மோட்டார் வாகனச்  சட்டத்தைத் திருத்துவதில் காட்டிய வேகம் மற்றும் ஆர்வத்தை தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடுவதிலும் காட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com