காலாண்டுத் தேர்வு விடுமுறையில் எந்த மாற்றமும் இல்லை: பள்ளிக் கல்வித்துறை விளக்கம்

காலாண்டுத் தேர்வு விடுமுறையில் எந்த மாற்றமும் இல்லை,  விருப்பமுள்ள பள்ளிகள் மட்டும் காந்திய சிந்தனை சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளலாம் என பள்ளிக் கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.
காலாண்டுத் தேர்வு விடுமுறையில் எந்த மாற்றமும் இல்லை: பள்ளிக் கல்வித்துறை விளக்கம்

காலாண்டுத் தேர்வு விடுமுறையில் எந்த மாற்றமும் இல்லை,  விருப்பமுள்ள பள்ளிகள் மட்டும் காந்திய சிந்தனை சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளலாம் என பள்ளிக் கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நடைபெற்றுவரும் காலாண்டுத் தேர்வுகள் வரும் 23-ஆம் தேதி முடிவடையவுள்ள நிலையில், காலாண்டுத் தேர்வு விடுமுறை செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 2-ஆம் தேதி வரை வழங்கப்படுவதாக, பள்ளிக் கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது.
இந்த நிலையில், மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த தினத்தையொட்டி இந்த ஆண்டு காலாண்டு விடுமுறையில் பள்ளிகளில் மாணவர்களுக்கு காந்திய சிந்தனைகள் குறித்த செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்ககம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட திட்ட இயக்குநர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது.
நிகழ்ச்சிகளின் பட்டியல் வெளியீடு: அதில், செப்.23 திங்கள்கிழமை சர்வமத பிரார்த்தனை, செவ்வாய்க்கிழமை காந்திய மதிப்புகளை மையமாகக் கொண்டு பாட்டு, நாடகம், மாறுவேடப் போட்டிகள், புதன்கிழமை தூய்மை விழிப்புணர்வு பேரணி, வியாழக்கிழமை பேச்சுப் போட்டிகள், பட்டிமன்றம், காந்திஜி குறித்த கலந்துரையாடல் என வரும் அக்டோபர் 2-ஆம் தேதி வரை காந்தியை நினைவுகூரும் நிகழ்ச்சிகள் பட்டியலிடப்பட்டிருந்தன. இதனால் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை ரத்து செய்யப்படவுள்ளதாகவும், விடுமுறை நாள்களில் மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்து காந்திய சிந்தனைகள் தொடர்பான நிகழ்ச்சிகளில்  ஈடுபட வேண்டும் என்ற தகவல், சமூக வலைதளங்களில் பரவியது.
பெற்றோர்- ஆசிரியர்கள் எதிர்ப்பு: இதனால் பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, இது தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பி.கே.இளமாறன் உள்பட பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகிகள் வெளியிட்ட அறிக்கையில், "பள்ளிக் கல்வித்துறை ஒரு அறிக்கையும், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்ககம் ஒரு அறிக்கையும் வெளியிடுவது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஒட்டுமொத்த மாணவர்கள், பெற்றொர்கள், ஆசிரியர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குகிறது.   மாணவர்கள் - ஆசிரியர்களுக்கு விடுமுறை அளிப்பது ஓய்வுக்காக அல்ல, கற்றல் கற்பித்தலில் தங்களைப் புதுப்பித்துக்கொள்வதற்காகவே என்ற உளவியல் கோட்பாட்டை அறியாதது வேதனையளிக்கிறது. மாணவர்கள் -ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக் கல்வித் துறையின் நலன் கருதி முதல்வர்  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தனர்.
கல்வித்துறை விளக்கம்: இந்த நிலையில், இது குறித்து விளக்கமளித்துள்ள பள்ளிக் கல்வித்துறை, காலாண்டு விடுமுறை ரத்து என்பது தவறான தகவல் ஆகும். ஏற்கெனவே அறிவித்தபடி, செப்.24 முதல் அக்.2-ஆம் தேதிவரை மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை என்ற உத்தரவே நீடிக்கும். இந்த விடுமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.  காந்திய சிந்தனை சார்ந்த நிகழ்ச்சிகளை விருப்பமுள்ள பள்ளிகள் நடத்திக்கொள்ளலாம் எனவும், அதில் விருப்பமுள்ள மாணவர்கள் கலந்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com