நீட் தேர்வில் ஆள்மாறாட்டமா? புகாருக்கு உள்ளான மாணவர் கல்லூரியில் இருந்து விலகல்!

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்று தேனி மருத்துவக் கல்லூரியில் மாணவர் ஒருவர் எம்பிபிஎஸ் படித்து வருவதாக புகார்கள் எழுந்தன.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டமா? புகாருக்கு உள்ளான மாணவர் கல்லூரியில் இருந்து விலகல்!


சென்னை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்று தேனி மருத்துவக் கல்லூரியில் மாணவர் ஒருவர் எம்பிபிஎஸ் படித்து வருவதாக புகார்கள் எழுந்தன.

நீட் தேர்வே மிகப்பெரிய சர்ச்சையாக இருக்கும் நிலையில், அதில் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டதாக எழுந்திருக்கும் தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர் உதித் சூர்யா, ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வெழுதியதாக கல்லூரி டீனுக்கு மின்னஞ்சலில் புகைப்படங்களுடன் புகார் வந்தது.

இந்த நிலையில், புகாருக்கு உள்ளான மாணவர் கல்லூரிக்கு வராமல் தவிர்த்தது மேலும் சந்தேகத்தை அதிகரித்தது.

இது குறித்து மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு, தேனி மருத்துவக் கல்லூரி நிர்வாகம் அறிக்கை சமர்ப்பித்து, இது குறித்து உயர்மட்டக் குழு அமைத்து விசாரிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது.

அதே சமயம், தேனி காவல்நிலையத்திலும் இது குறித்து விசாரணை நடத்துமாறு தேனி மருத்துவக் கல்லூரி டீன் ராஜேந்திரன் புகார் அளித்துள்ளார்.

புகார் எழுந்த நிலையில், சம்பந்தப்பட்ட மாணவரும் கல்லூரிக்கு வராமல் இருக்கிறார். அவரது பெற்றோரிடம் கேட்டதற்கு, இரண்டு முறை அவர் சென்னையில் நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்ததும், 3வது முறையாக மும்பையில் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர். சில கேள்விகளுக்கு முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், மருத்துவக் கல்வி இயக்குநர் (பொறுப்பு) நாராயண பாபு செய்தியாளர்களிடம் பேசுகையில், மாணவர் உதித் சூர்யா முறைகேடாக மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார். +2 முடித்து 3வது ஆண்டாக நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். மாணவரின் புகைப்படத்துடன் கைரேகையும் ஒப்பிட்டுப் பார்த்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை குறித்து மறுஆய்வு செய்யுமாறு அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 
 
உதித் சூர்யாவின் ஹால் டிக்கெட்டில் இருக்கும் புகைப்படம் மற்றும் புகாருக்கு உள்ளான மாணவரின் புகைப்படமும் வெவ்வேறாக உள்ளது. நீட் தேர்வில் 385 மதிப்பெண்களை உதித் சூர்யா எடுத்துள்ளார். எனவே, நீட் தேர்வை எழுதியது உதித் சூர்யாவா இல்லையா என விசாரிக்க காவல்துறையைக் கேட்டுக் கொண்டுள்ளோம். 

மன அழுத்தம் எனக் கூறி கல்லூரியில் இருந்து விலகுவதாக உதித் சூர்யா விலகல் கடிதத்தை கல்லூரியில் அளித்துள்ளார். அவர் முறைகேடு செய்தது உறுதியானால் மேல் நடவடிக்கை எடுக்கப்படூம். தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து எம்பிபிஎஸ் படித்து வந்த உதித் சூர்யா சென்னையை சேர்ந்தவர்  எனவும் இயக்குநர் (பொறுப்பு) நாராயண பாபு தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com