கோவை குழந்தைகள் கொலை வழக்கு: குற்றவாளியின் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற அக்.16 வரை இடைக்காலத் தடை

கோவை இரட்டைக் குழந்தைகள் கொலை வழக்கின் குற்றவாளி மனோகரனுக்கு வெள்ளிக்கிழமை (செப். 20) நிறைவேற்றப்பட இருந்த தூக்குத் தண்டனைக்கு, அக்டோபர் 16-ஆம் தேதி வரை இடைக்காலத் தடை
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

கோவை இரட்டைக் குழந்தைகள் கொலை வழக்கின் குற்றவாளி மனோகரனுக்கு வெள்ளிக்கிழமை (செப். 20) நிறைவேற்றப்பட இருந்த தூக்குத் தண்டனைக்கு, அக்டோபர் 16-ஆம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
கோவையைச் சேர்ந்த ஜவுளிக் கடை உரிமையாளர் ரஞ்சித். இவரது குழந்தைகள் முஸ்கான் (11), ரித்திக் (8). இருவரும் 2010, அக்டோபர் 29-இல் கடத்தப்பட்டனர். இதில் சிறுமி முஸ்கான், பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். பின்னர், குழந்தைகள் இருவரும் விஷம் வைத்துக் கொலை செய்யப்பட்டு, உடல்கள் பொள்ளாச்சி அருகே உள்ள வாய்க்காலில் வீசப்பட்டன. 
இந்த இரட்டைக் கொலை தொடர்பாக, குழந்தைகளை பள்ளிக்கு வேனில் அழைத்துச் சென்ற ஓட்டுநரான பொள்ளாச்சி அங்கலக்குறிச்சியைச் சேர்ந்த மோகனகிருஷ்ணன், அதே பகுதியைச் சேர்ந்த அவரது கூட்டாளி மனோகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். குழந்தைகளைக் கொலை செய்த இடத்தை அடையாளம் காட்டுவதற்காக மோகன கிருஷ்ணனை 2010, நவம்பர் 9-இல் அழைத்துச் சென்றனர். அப்போது, தப்பிக்க முயன்ற அவரை போலீஸார் சுட்டதில் உயிரிழந்தார். மனோகரன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த கோவை மகளிர் நீதிமன்றம், மனோகரனுக்கு இரட்டைத் தூக்குத் தண்டனையும், 3 ஆயுள் தண்டனையும் விதித்து 2012, நவம்பர் 1-இல் தீர்ப்பு அளித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனோகரன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் 2014, செப்டம்பர் 20-இல் மேல்முறையீடு செய்யப்பட்டது.
 உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எஃப்.நாரிமன், சஞ்சீவ் கன்னா, சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து கடந்த ஆகஸ்ட் 1-இல் இறுதி உத்தரவு பிறப்பித்தது. இதில் நீதிபதிகள் ஆர்.எஃப்.நாரிமன், சூர்ய காந்த் ஆகியோர் கீழ் நீதிமன்றம் பிறப்பித்த தூக்குத் தண்டனையை உறுதி செய்தனர். நீதிபதி சஞ்சீவ் கன்னா தனது உத்தரவில் குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனைக்குப் பதிலாக, அவரது வாழ்நாள் முழுவதும் எவ்வித நிவாரணமும் வழங்காமல் சிறைத் தண்டனையை விதிக்கலாம் என்று பதிவு செய்திருந்தார்.
கடைசி வாய்ப்பு: இந்நிலையில், தூக்குத் தண்டனை பெற்ற மனோகரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் ஆர்.எஃப். நாரிமன், சஞ்சீவ் கன்னா, சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் தரப்பில் வழக்குரைஞர் யோகேஷ் கன்னா ஆஜரானார். குற்றவாளி மனோகரன் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ரேவதி ராகவன், மனோகரனுக்கு அளிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனை செப்டம்பர் 20-ஆம் தேதி நிறைவேற்றப்படவுள்ளது. இந்த வழக்கு தொடர்புடைய ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டியிருப்பதாலும், வழக்கில் வாதாடுவதற்கு மூத்த வழக்குரைஞர் வர முடியாததாலும் வழக்கு விசாரணையை அக்டோபர் 2-ஆவது வாரத்துக்கு ஒத்திவைக்க வேண்டும். இந்த வழக்கு நடைபெற்ற காலம் முழுவதும் மனோகரன் சிறையில் இருந்துள்ளார். அவரது தரப்பில் ஏழு வழக்குரைஞர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, விசாரணை நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை மனோகரன் தரப்பில் உரிய வகையில் வாதங்கள் முன்வைக்கப்படவில்லை. மேலும், வாக்குமூலத்தை மாஜிஸ்திரேட் பதிவு செய்த போது மனோகரனுக்கு உரிய சட்ட உதவி அளிக்கப்படவில்லை. இதனால், அந்த ஆவணங்களை ஆராய வேண்டியுள்ளது என்றார். 
அதற்கு நீதிபதிகள், இந்த விவகாரம் தூக்குத் தண்டனை தொடர்புடையாக இருப்பதால், வழக்குரைஞர் வாதிடுவதற்கு கடைசி வாய்ப்பாக அக்டோபர் 16-ஆம் தேதி மதியம் 3 மணிக்கு விசாரணை நடைபெறும். அதுவரை தூக்குத் தண்டனையை நிறைவேற்ற இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. மேலும், இந்த மனுவில் ஒன்றும் இல்லை; எங்களது நேரம் வீணடிக்கப்பட்டிருக்கிறது என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com