ரூ. 6,078 கோடியில் பேரூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: அரசு நிதிக்கு நிர்வாக ஒப்புதல்

சென்னையை அடுத்த பேரூரில்  ரூ. 6,078 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கான நிதிக்கு தமிழக அரசு நிர்வாக ஒப்புதல் அளித்துள்ளது. 
(கோப்புப் படம்)
(கோப்புப் படம்)


சென்னையை அடுத்த பேரூரில்  ரூ. 6,078 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கான நிதிக்கு தமிழக அரசு நிர்வாக ஒப்புதல் அளித்துள்ளது. 

இந்தத் திட்டமானது ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கி நிதியுதவியுடன்  செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான உத்தரவை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் அண்மையில் வெளியிட்டார். 

அந்த உத்தரவு விவரம்: சென்னையை அடுத்த பேரூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வர் கே.பழனிசாமி அறிவித்தார். இந்தத் திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையை சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியமானது தமிழக அரசிடம் அளித்தது. இந்தத் திட்டமானது ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கியின் 85 சதவீத நிதியுடனும், தமிழக அரசின் 15 சதவீத மானியத்துடனும் நிறைவேற்றப்பட உள்ளது. அதன்படி, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கியானது ரூ.4,267.70 கோடியையும், தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியமானது ரூ.749.60 கோடியையும், மாநில அரசின் நிதி ஆதாரத்தில் இருந்து ரூ.1,061.10 கோடி நிதியும் விடுவிக்கப்பட உள்ளதாக அந்த உத்தரவில் ஹர்மந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

செயலாக்கம் மற்றும் பராமரிப்பு: கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் செயலாக்கம், பராமரிப்பு ஆகியன முக்கியப் பங்கு வகிக்கின்றன. நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கான ஆண்டு பராமரிப்பு மற்றும் செயலாக்கச் செலவானது ஆயிரம் கோடி ரூபாயாகும். இந்த நிதியை முற்றிலுமாக ஏற்க முடியாது என சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் தமிழக அரசுக்குத் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, மாநில அரசின் நிதியைப் பெற்று செயலாக்கம் மற்றும் பராமரிப்புச் செலவுகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நிதிகள் உள்ளிட்ட விஷயங்கள் திட்டம் நடைமுறைக்கும் வரும்போது தெரியப்படுத்தப்படும் என மாநில அரசு கூறியுள்ளது.

பராமரிப்புக்கு எவ்வளவு?: பேரூர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தைப் பொருத்தவரையில், 20 ஆண்டுகளுக்கு பராமரிப்பு மற்றும் செயலாக்கச் செலவானது ரூ.20 ஆயிரத்து 174.14 கோடியாக உள்ளது. மேலும் நிலத்துக்கான 30 ஆண்டு கால குத்தகைத் தொகை ரூ.82 கோடியாகும். ஆண்டுக்கு சராசரியாக ரூ.1,000 கோடியை பேரூர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு மட்டும் செலவிட வேண்டிய நிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.
 இந்தத் திட்டம் செயல்பாட்டு வந்த பிறகு சென்னையின் குடிநீர் விநியோகத்தில் பிரச்னை ஏற்படாது என்று கூறப்படுகிறது. 
பருவமழை பொய்த்தாலும் கூட தட்டுப்பாடு இல்லாமல் சென்னை நகருக்கு குடிநீரை விநியோகிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com