ஹிந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் ஒத்திவைப்பு: ஆளுநருடனான சந்திப்புக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடனான சந்திப்புக்குப் பிறகு, ஹிந்திதிணிப்புக்கு எதிரான போராட்டத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  தற்காலிகமாக ஒத்திவைத்து புதன்கிழமை அறிவித்தார்.
ஹிந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் ஒத்திவைப்பு: ஆளுநருடனான சந்திப்புக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடனான சந்திப்புக்குப் பிறகு, ஹிந்திதிணிப்புக்கு எதிரான போராட்டத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  தற்காலிகமாக ஒத்திவைத்து புதன்கிழமை அறிவித்தார்.
நாட்டின் அடையாள மொழியாக ஹிந்தி இருக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா அண்மையில் பேசியிருந்தார்.
இதற்கு தமிழகத்தில் உள்ள கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், திமுக சார்பில் உயர்நிலைக் குழு கூட்டம் கூட்டப்பட்டது.
அதில், ஹிந்தி திணிப்பை எதிர்த்து தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் செப்டம்பர் 20-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு புதன்கிழமை காலை அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்று ஆளுநரை மு.க.ஸ்டாலின்  புதன்கிழமை மாலை சந்தித்தார். மு.க.ஸ்டாலினுடன் நாடாளுமன்றத் திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவும் உடன் சென்றார்.
இந்தச் சந்திப்பு சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. அதன் பிறகு அறிவாலயத்துக்கு வந்த மு.க.ஸ்டாலின், அங்கு செய்தியாளர்களிடம் கூறியது:
ஆளுநர் என்னைச் சந்திக்க விரும்புவதாக புதன்கிழமை காலை அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு அவரை நானும், டி.ஆர்.பாலுவும் சந்தித்தோம். ஆளுநரைச் சந்தித்தபோது வரும் 20-ஆம் தேதி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தைப் பற்றி பேசினார். ஆர்ப்பாட்டத்தை என்ன காரணத்துக்காக நடத்துகிறோம் என்பதை விளக்கிச் சொன்னோம். அதைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சொன்ன கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருப்பதாகவும், எந்தக் காரணத்தைக் கொண்டும் தமிழகத்தில் ஹிந்தி திணிக்கப்பட மாட்டாது என்றும் ஆளுநர் அழுத்தம் திருத்தமாக எடுத்துச் சொன்னார். இதை மத்திய அரசு சொல்ல முன்வருமா என்று கேட்ட நேரத்தில், நான் மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கக் கூடியவர். மத்திய அரசு சொல்லித்தான் உங்களிடம் கூறுகிறேன் என்கிற உறுதியைக் கொடுத்தார்.
அதைத் தொடர்ந்து, அமித் ஷா ஊடகங்களிûல் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். இந்தியாவின் ஒரே மொழியாக ஹிந்திதான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. நான் சொன்னது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது என்று மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லியுள்ளார். 
எனவே, அந்தக் கருத்தை மனதில் கொண்டு வரும் 20-ஆம் தேதி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளோம். அதேசமயம், எந்த நிலையில் ஹிந்தி திணிக்கப்பட்டாலும், நிச்சயமாக அதை திமுக என்றும் எதிர்க்கும்.
தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இந்தப் போராட்டம் பரவக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. அதனால், எங்களை அழைத்து விளக்கம் தர வேண்டும் என்பதற்காக ஆளுநர் எங்களை அழைத்துப் பேசியிருக்கலாம்.
ஏற்கெனவே, தபால் நிலையம் மற்றும் ரயில் நிலையத் தேர்வுகள் ஹிந்தி மட்டுமே எழுத வேண்டும் என்று கூறியதை எதிர்த்து போராட்டம் நடத்தியுள்ளோம். அப்போது உடனே அந்த முடிவு திரும்பப் பெறப்பட்டுள்ளது. அதனால், இப்போது ஹிந்தி திணிப்புக்கு எதிராக திமுக அறிவித்த போராட்டத்துக்கு விளக்கம் கொடுக்கப்பட்டிருப்பது, உள்ளபடியே திமுகவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்றார். 
பேட்டியின்போது பொருளாளர் துரைமுருகன், நாடாளுமன்றத் திமுக குழுத் தலைவர் கனிமொழி ஆகியோரும் உடனிருந்தனர்.
பிரதமர் வரும் நேரம்: பிரதமர் நரேந்திர மோடி, சென்னை ஐஐடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க செப்டம்பர் 30-ஆம் தேதி வர உள்ளார். அதேபோல, பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் வரும் அக்டோபர் 11-ஆம் தேதி சந்தித்து உரையாட உள்ளனர்.
தமிழகத்துக்கு பிரதமர் வரவுள்ள நிலையில், எந்தவித போராட்டமும் இருக்க வேண்டாம் என்று மத்திய அரசு கருதி, அதன் அடிப்படையில் மு.க.ஸ்டாலினை ஆளுநர் அழைத்துப் பேசியுள்ளார் என்று அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com