தமிழ் இணையவழி பயன்பாடு அதிகரிக்க வேண்டும்: அமைச்சர் க.பாண்டியராஜன்

இணையவழி தமிழ் மொழிபெயர்ப்பு மற்றும் தமிழ்வழி தகவல்தொடர்பும் அதிகரிக்க வேண்டும் என தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் வலியுறுத்தினார்.
தமிழ் இணையவழி பயன்பாடு அதிகரிக்க வேண்டும்: அமைச்சர் க.பாண்டியராஜன்


இணையவழி தமிழ் மொழிபெயர்ப்பு மற்றும் தமிழ்வழி தகவல்தொடர்பும் அதிகரிக்க வேண்டும் என தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் வலியுறுத்தினார்.
18-ஆவது தமிழ் இணைய மாநாடு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. தொடக்க விழாவில் பங்கேற்ற அமைச்சர் க. பாண்டியராஜன் பேசியதாவது:
உலகில் இன்றைக்கு நடைபெறும் தகவல் தொடர்பில் 80 சதவீதம் இணையவழியில்தான் நடைபெறுகிறது. அவ்வாறு இணையவழியில் நடைபெறும் 80 சதவீத தகவல் தொடர்பில் 54 சதவீதம் ஆங்கில மொழியில் மேற்கொள்ளப்படுகிறது.  ரஷிய மொழியில் 6 சதவீதம் நடைபெறுகிறது. சீன மொழி மூலம் 1.7 சதவீதம் அளவுக்கு தகவல் தொடர்பு நடைபெறுகிறது. ஆனால், தமிழ் மொழி மூலம் 0.15 சதவீத அளவுக்கு மட்டுமே இணையவழியில் தகவல் தொடர்பு நடைபெறுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தகவல் தொடர்பில் அதிகம் இடம்பெறாத மொழிகள், வழக்கிலிருந்து அகன்றுவிடும் அபாயம் உள்ளது. உலகில் உள்ள 7 செம்மொழிகளில் தமிழ், சீனம் ஆகிய இரு மொழிகள் மட்டுமே இன்றைக்கு பேசப்பட்டு வருகின்றன. மற்ற 5 மொழிகளும் பேசப்படுவது கிடையாது.  எனவே, தமிழ் மொழியை உயிர்ப்புடன் வைத்திருக்க, இணைய தகவல் தொடர்பில் தமிழ் மொழியை அதிகம் பயன்படுத்த வேண்டிய அவசரம் எழுந்துள்ளது. இது இளைஞர்களால்தான் முடியும். ஏனெனில், இன்றைய இளைஞர்கள் புதிய வார்த்தைகளை உருவாக்கி வருகின்றனர். அவர்களை அறியாமலேயே, கெத்து, வச்சி செய்வது உள்ளிட்ட வழக்கொழிந்த வார்த்தைகளைப் பிரபலப்படுத்தி வருகின்றனர். இந்த வார்த்தைகள் சிலப்பதிகாரத்திலும் இடம்பெற்றுள்ளன.
இதுபோல, புதிய தமிழ் சொற்களை மீட்டெடுக்கும் முயற்சியாகத்தான் தமிழக அரசு சொற்குவைத் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இதில் இளைஞர்கள் புதிய தமிழ் சொற்களை உருவாக்கி பங்களிப்பை செய்யவேண்டும். இதற்கு இளைஞர்கள் சொற்படை வீரர்களாகத் தயாராகவேண்டும் என்றார் அமைச்சர் பாண்டியராஜன்.
மேலும், தீர்ப்புகள் அனைத்தையும் 22 ஆட்சி மொழிகளில் வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தினமும் நூற்றுக்கணக்கான தீர்ப்புகள் அளிக்கப்படுகின்றன. இவற்றை மொழிபெயர்க்க போதிய எண்ணிக்கையில் மொழிபெயர்ப்பு திறன்கொண்ட வழக்குரைஞர்கள் இல்லை. இதன் காரணமாக, தமிழ் மொழிபெயர்ப்புக்கான செயலியை உருவாக்கவேண்டிய தேவையும் எழுந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்: கணினியை ஏற்றுக்கொள்ள முடியாத மொழி வளராது என்ற நிலை இன்றைக்கு உருவாகியிருக்கிறது. எனவே, தமிழ் மொழி கணினி வழி பயன்பாட்டை அதிகரிக்கவேண்டும் என்றார் அவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com