கோவையில் சந்தன மரங்களை வெட்டிக் கடத்திய வழக்கில் இருவர் கைது

கோவையில் சந்தன மரங்கள் கடத்தப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த இருவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவையில் சந்தன மரங்கள் கடத்தப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த இருவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை மாநகரில் ஆர்.எஸ்.புரம், சாய்பாபா காலனி, ரேஸ்கோர்ஸ் ஆகிய பகுதிகளில் தனியார் வீடுகள், அலுவலகங்களில் இருந்த சந்தன மரங்களை அடையாளம் தெரியாத கும்பல் வெட்டிக் கடத்தியது.
இந்நிலையில், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாவட்ட நீதிபதி ஆர்.நந்தினிதேவியின் வீட்டு வளாகத்தில் ஆறு பேர் கும்பல் ஒன்று கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி அதிகாலை நுழைந்தது. பின்னர் கும்பலைச் சேர்ந்த இருவர் நீதிபதியின் வீட்டுக் காவலரை கத்தி முனையில் மிரட்டி தனியே அழைத்துச் சென்றுள்ளனர். அதே நேரத்தில் மற்ற நான்கு பேரும் அங்கிருந்த சந்தன மரத்தை வெட்டியுள்ளனர். பின்னர் 6 பேரும் அங்கிருந்து காரில் சந்தன மரக்கட்டைகளுடன் தப்பிச் சென்றது தெரியவந்தது.
இது தொடர்பாக ஆர்.எஸ்.புரம் போலீஸார் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தனிப் படை அமைத்தனர். இந்தத் தனிப் படை போலீஸார் சம்பவத்தில் தொடர்புடைய வேலூர் மாவட்டம், ஜவ்வாது மலைப் பகுதியைச் சேர்ந்த ஆர்.ராமசாமி (50), ஆர்.கோவிந்தராஜ் (34) ஆகியோரைக் கைது செய்தனர். ராமசாமி மீது ஆந்திர மாநிலத்துக்கு செம்மரம் கடத்திய வழக்கு ஒன்று ஏற்கெனவே நிலுவையில் உள்ளது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் வெள்ளிக்கிழமை காலை கோவைக்கு அழைத்து வந்த போலீஸார் இருவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள கும்பலைச் சேர்ந்த 4 பேர் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், சம்பவத்தில் தொடர்புடைய ஆறு பேரும் திருப்பத்தூரில் இருந்து கோவைக்கு ரயில் மூலம் வந்து தினசரி இரவு 11 மணி அளவில் வாடகை கார்களை எடுத்துக் கொண்டு கோவையில் எங்கெல்லாம் சந்தன மரங்கள், செம்மரங்கள் உள்ளன என்பதை நோட்டம் விட்டு சுற்றி வந்துள்ளனர்.
சந்தன மரங்கள் இருக்கும் இடங்களைத் தொடர்ந்து கண்காணித்து நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 3 மணிக்குள் சந்தன மரங்களை வெட்டி கார் மூலம் அனுப்பிவைத்துவிட்டு பின்னர் அங்கிருந்து ரயில் மூலம் தப்பிச் செல்வது வழக்கம். இந்தக் கும்பல் செயல்படும் விதம் மற்றும் இவர்களது தொடர்புகள் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com