புதுச்சேரியில் போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்

நிலுவை ஊதியம், போனஸ் தொகையை வழங்கியும் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த புதுச்சேரி போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று வாபஸ் பெறப்பட்டது.
புதுச்சேரியில் போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்


நிலுவை ஊதியம், போனஸ் தொகையை வழங்கியும் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த புதுச்சேரி போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று வாபஸ் பெறப்பட்டது.

கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த பிஆர்டிசி ஊழியர்களின் போராட்டத்தால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இந்த நிலையில், போக்குவரத்து ஊழியர்களுடன், போக்குவரத்துத் துறை மேலாண் இயக்குநர் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எட்டப்பட்டதை அடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

இதையடுத்து, புதுச்சேரியில் போக்குவரத்து ஊழியர்கள் வழக்கம் போல பேருந்துகளை இயக்கினர்.

அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றினால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம் என ஊழியர்கள் கூறி வந்த நிலையில், மேலாண் இயக்குநர் அளித்த உறுதிமொழியை ஏற்று போராட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

புதுவை அரசு சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் (பிஆர்டிசி) 946 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். புதுச்சேரி மட்டுமன்றி, தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு 140-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கடந்த 3 மாதங்களாக பிஆர்டிசி ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை.

இதை உடனே வழங்கக் கோரியும், 7 -ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், கடந்தாண்டு அறிவித்த போனஸ் தொகையை வழங்க வேண்டும், ஒப்பந்த ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 17 -ஆம் தேதி முதல் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து, 4 -ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் போராட்டம் நடைபெற்றது. இதனால், பிஆர்டிசி பேருந்துகள் இயக்கப்படாமல் பணிமனையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதேபோல, காரைக்கால், மாஹே, ஏனாமிலும் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வந்தது. 

இதன் காரணமாக நாளொன்றுக்கு பிஆர்டிசி மூலம் அரசுக்குக் கிடைக்கும் ரூ. 15 லட்சம் வருமானம் கிடைக்காமல் போனது. பேருந்துகள் ஓடாததால், உள்ளூர் பயணிகளும், வெளியூர் பயணிகளும் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். குறிப்பாக, கிராமப்புற மக்கள் தங்களது பகுதிகளுக்குச் செல்ல முடியாமலும், அங்கிருந்து நகரப் பகுதிக்கு வர முடியாமலும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

பிஆர்டிசி மேலாண் இயக்குநர் குமார் ஊழியர்களை அழைத்து நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஊழியர்ளுக்கு வழங்கப்படாமல் இருந்த 3 மாத நிலுவை ஊதியம் மற்றும் போனஸ் தொகை ரூ. 11 ஆயிரத்தைச் சேர்த்து மொத்தம் ரூ. 4.8 கோடியை ஊழியர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைத்துவிட்டதாகவும், எனவே, போராட்டத்தைக் கைவிட்டுப் பணிக்குத் திரும்பும்படியும் கூறினார். 

ஆனால், ஊழியர்கள் 7 -ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது, ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளையும் நிறைவேற்றினால்தான் போராட்டத்தைக் கைவிடுவோம் எனத் தெரிவித்து, போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதனால், சனிக்கிழமையும் (செப். 21) போராட்டம் தொடரும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அதில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com