இந்தியாவில் 1.50 கோடி பேர் வேலையிழக்கும் அபாயம்: சி.ஐ.டி.யு. அகில இந்திய பொதுச் செயலர்

இந்தியாவில் பொருளாதார மந்த நிலையால் சுமார் 1.50 கோடி பேர் வேலையிழக்கும்  அபாயம் ஏற்பட்டிருப்பதாக சி.ஐ.டி.யு. அமைப்பின்  அகில இந்திய பொதுச் செயலர் தபன்சென் சனிக்கிழமை   கூறினார். 

இந்தியாவில் பொருளாதார மந்த நிலையால் சுமார் 1.50 கோடி பேர் வேலையிழக்கும்  அபாயம் ஏற்பட்டிருப்பதாக சி.ஐ.டி.யு. அமைப்பின்  அகில இந்திய பொதுச் செயலர் தபன்சென் சனிக்கிழமை   கூறினார். 
காஞ்சிபுரம் அருணா மஹாலில் சி.ஐ.டி.யு. அமைப்பின் 14 -ஆவது மாநில மாநாடு செப்.19-இல் தொடங்கியது. மாநாட்டின் 3-ஆவது நாள் நிகழ்வாக பிரதிநிதிகள் விவாதம் நடைபெற்றதுடன் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இதில் பங்கேற்க வந்திருந்த அகில இந்திய பொதுச் செயலர் தபன்சென் செய்தியாளர்களிடம் கூறியது:
உலக அளவில் பொருளாதார  மந்த நிலை ஏற்பட்டுள்ளது. அது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்திய மக்களிடையே வாங்கும் சக்தி குறைந்து விட்டது. வாங்கும் சக்தி குறைந்து போனதால் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் சுமார் 1.50 கோடி பேர் வேலையிழக்கும் அபாய நிலையில் உள்ளனர். இது தொடர்ந்தால் மக்களின் வாங்கும் சக்தி மேலும் வீழ்ச்சியடைந்துவிடும்.
பல தொழிற்சாலைகளில்  தொழிலாளர்கள் தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் வேலையிழந்து வருகின்றனர்.
சுரங்கத் தொழிலில் ஈடுபடுவோர், பாதுகாப்புத் துறையில் பணியாற்றுவோர், வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கத்தினர் உள்பட பலரும் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். மத்திய அரசு முதலாளிகளுக்கு ஏற்றவாறு சலுகைகளை அறிவித்துக் கொண்டே இருக்கிறது. சாதாரண மக்களைப் பற்றி கவலைப்படவில்லை.
 மத்திய அரசின் இச்செயலைக் கண்டித்தும், இப்பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வலியுறுத்தியும் வரும் 30-ஆம் தேதி மாபெரும் போராட்டத்தை அறிவிக்க இருக்கிறோம் என்றும் தபன்சென் தெரிவித்தார்.
நிகழ்வில், சி.ஐ.டி.யு. மாநிலத் தலைவர் அ.சௌந்தரராஜன், காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் எஸ்.கண்ணன், மாவட்டச் செயலர் இ.முத்துக்குமார், விவசாயிகள் சங்கத் தலைவர் கே.நேரு உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com