விக்கிரவாண்டி, நான்குனேரி இடைத் தேர்தல்: நாளை வேட்புமனு தொடக்கம்: அக். 21-இல் வாக்குப் பதிவு

விக்கிரவாண்டி, நான்குனேரி சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் அக்டோபர் 21-இல் நடைபெறுகிறது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

விக்கிரவாண்டி, நான்குனேரி சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் அக்டோபர் 21-இல் நடைபெறுகிறது. 

இதற்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்குகிறது.

நான்குனேரி சட்டப் பேரவைத் தொகுதி எம்எல்ஏவாக இருந்த எச்.வசந்த்குமார், மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து, அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதேபோன்று, விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏவாக இருந்த ராதாமணி, உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் காலமானார். இதையடுத்து, அந்தத் தொகுதியும் காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
சட்டப் பேரவைத் தொகுதி காலியான தினத்தில் இருந்து ஆறு மாதங்களுக்குள் அந்தத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதியாகும்.
இதன் அடிப்படையில், காலியாகவுள்ள நான்குனேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் சனிக்கிழமை அறிவித்தது.
நாளை வேட்புமனு தொடக்கம்: இடைத் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு:
இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (செப். 23) தொடங்குகிறது. தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கலுக்கு செப்டம்பர் 30 கடைசி நாளாகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 1-ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெற அக்டோபர் 3 கடைசி நாளாகும்.
வாக்குப் பதிவு அக்டோபர் 21-இல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் அக்டோபர் 24-ஆம் தேதி எண்ணப்பட உள்ளன என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியலே இரண்டு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலிலும் பயன்படுத்தப்பட உள்ளது. இரண்டு தொகுதிகளிலும் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்து கொள்வதற்கான இயந்திரங்களும் வைக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமல்: இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நான்குனேரி, விக்கிரவாண்டி தொகுதிகள் முறையே திருநெல்வேலி மற்றும் விழுப்புரம் மாவட்டத்துக்குள் வருகின்றன. இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அந்த இரண்டு மாவட்டங்கள் முழுவதும் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளன. இதனால், புதிய அறிவிப்புகளோ, புதிய திட்டங்களையோ அந்த இரண்டு மாவட்டங்களுக்கும் அறிவித்துச் செயல்படுத்தக் கூடாது. தேர்தல் நடத்தை நெறிமுறைகள் காரணமாக, மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையும், கண்காணிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


தேர்தல் அட்டவணை


வேட்புமனு தாக்கல் தொடக்கம்: 
செப்டம்பர் 23
வேட்புமனு தாக்கலுக்கு கடைசி: 
செப்டம்பர் 30.
வேட்புமனுக்கள் 
மீதான பரிசீலனை: 
அக்டோபர் 1.
வேட்புமனுக்களை 
திரும்பப் பெற கடைசி நாள்: 
அக்டோபர் 3.
வாக்குப் பதிவு: 
அக்டோபர் 21.
வாக்கு எண்ணிக்கை: 
அக்டோபர் 24.
தேர்தல் நடவடிக்கைகள் 
நிறைவு: 
அக்டோபர் 27.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com