தோல் தொழில் துறை: 5 ஆண்டுகளில் 20 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்: அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே

தோல் தொழில் துறை: 5 ஆண்டுகளில் 20 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்: அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே

தோல் தொழில் துறையில் அடுத்த 5 ஆண்டுகளில் 20 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என என மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே கூறினார்.

தோல் தொழில் துறையில் அடுத்த 5 ஆண்டுகளில் 20 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என என மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே கூறினார்.

பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று, பயிற்சியை முடித்த 150 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கிய மத்திய அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே பேசியதாவது: தோல் ஆடைகள் மற்றும் காலணி உற்பத்தியில் உலக அளவில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. உலகின் மொத்த தோல் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 13 சதவீதம். வரும் ஆண்டுகளில் இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடந்த காலத்தில், காலணி மற்றும் உப பொருள்கள் உற்பத்தியில்  மிகுந்த பாரம்பரிய கைவினைத்
திறன் கொண்ட நாடாக திகழ்ந்தது. ஆக்ரா, கான்பூர், ஆம்பூர் போன்ற தோல் தொழிற்சாலைகள் மிகுந்த பகுதிகளில் உயர் திறன் வாய்ந்த கைவினைஞர்கள், தரமான காலணிகளைத் தயாரித்து வருகின்றனர். தோல் தொழில் துறையில் காலத்திற்கேற்ற நாகரிக  வடிவமைப்புகளை பின்பற்ற வேண்டியது அவசியம். சென்னை உள்பட நாடு முழுவதும் உள்ள காலணி தயாரிக்கும் தொழிலாளர்கள், கௌரவமான முறையில் பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும். அதற்கு, தோல் துறை சார்ந்த திறன் மேம்பாட்டு கவுன்சில், தமது சமூகப் பொறுப்புணர்வு நிதியிலிருந்து உதவி செய்ய வேண்டும். காலணி தயாரிக்கும் தொழிலாளர்களுக்குத் தேவையான குடை மற்றும் சிறு கடைகளை அமைத்து கொடுத்து, அவர்களது தொழிலை முறைப்படுத்த உதவ முன்வரவேண்டும். தோல் தொழில் துறையில் நூறு சதவீத அந்நிய நேரடி முதலீட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 

இந்த ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் கச்சா மற்றும் பாதியளவு தயாரிக்கப்பட்ட தோல் பொருள்களுக்கான ஏற்றுமதி வரி சீரமைக்கப்படும் என்று அறிவித்ததன் காரணமாக இத்துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், இந்தத் துறையில் அடுத்த 5 ஆண்டுகளில் 20 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றார் அவர். விழாவில், தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com