சிவில் நீதிபதிகள் பணித் தேர்வு: தமிழ் தெரியாதவர்களை அனுமதிக்கக் கூடாது

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள சிவில் நீதிபதி பணிகளுக்கானத் தேர்வில் பங்கேற்க தமிழ் தெரியாதவர்களை அனுமதிக்கக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள சிவில் நீதிபதி பணிகளுக்கானத் தேர்வில் பங்கேற்க தமிழ் தெரியாதவர்களை அனுமதிக்கக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழக நீதித்துறையில் சிவில் நீதிபதி பணிகளுக்கான போட்டித் தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழ் மொழி தெரியாதவர்களும் இந்தப் போட்டித் தேர்வுகளை எழுதலாம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சிவில் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை, சாட்சியம் உள்ளிட்ட அனைத்தும் தமிழ்  மொழியில்தான் நடக்கும். சிவில் நீதிமன்றங்களில் சொத்துகள் குறித்த வழக்குகள்தான் அதிக எண்ணிக்கையில் நடைபெறும். இந்த வழக்குகளை தீர்மானிப்பதற்கான முக்கிய ஆதாரங்கள் நிலப்பதிவு  பத்திரங்கள்தான். இவை பெரும்பாலும் தமிழில்தான் இருக்கும். 

பத்திரங்களில் உள்ள வாசகங்களை அறிந்து கொள்ள தமிழ் மொழி மட்டும் தெரிந்திருந்தால் போதாது. உள்ளூர் மொழிநடையும் தெரிந்திருக்க வேண்டும். 

அதே நேரம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளை இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் எழுதலாம் என்ற விதிமுறை பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. ஆனால், அப்போதெல்லாம் தமிழகம் தவிர்த்த பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் எவரும் தமிழ்நாடு அரசுப் பணிகளில் சேர ஆர்வம் காட்டியதில்லை. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக தொடர்வண்டித் துறை, அஞ்சல்துறை, வங்கிகள் என மத்திய அரசுப் பணிகள் மூலம் தமிழகத்தில் வேலைவாய்ப்புகளை அபகரித்து வரும் வெளி மாநிலத்தவர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் விதிகளில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி தமிழ்நாடு மின்சார வாரியம் உள்ளிட்ட தமிழக அரசுப் பணிகளையும் கைப்பற்றத் தொடங்கியுள்ளனர். இதனால் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்படுவதோடு, பண்பாடு, கலாசாரம் சார்ந்த பிரச்னைகளும் ஏற்படும் ஆபத்து உள்ளது. 

எனவே, சிவில் நீதிபதிகள் உள்ளிட்ட தமிழக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பணிகளில் தமிழர்களை மட்டுமே நியமிக்கும் வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய விதிகளில் திருத்தங்களைச் செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com