நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்

தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டில் சேர்ந்த சென்னை மாணவர் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்


சென்னை: தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டில் சேர்ந்த சென்னை மாணவர் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த உதித்சூர்யா(20). "நீட்' தேர்வை ஆள்மாறாட்டம் செய்து எழுதி, தேனி அரசு அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாண்டு படிப்பில் சேர்ந்துள்ளதாக புகார் எழுந்தது. இதுகுறித்து க.விலக்கு காவல் நிலையத்தில் மருத்துவக் கல்லூரி முதன்மையர் ராஜேந்திரன் புகார் அளித்தார். 

இந்தப் புகாரின் மீது போலீஸார் வழக்குப் பதிந்து, ஆண்டிபட்டி காவல் நிலைய ஆய்வாளர் உஷா தலைமையில் தனிப் படை அமைத்து தலைமறைவாக உள்ள மாணவர் உதித்சூர்யாவை தேடி வருகின்றனர். சென்னையில், உதித் சூர்யாவின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் தனிப்படை காவல் சார்பு ஆய்வாளர் சுல்தான் பாட்ஷா தலைமையில் ஒரு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனியில் அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையர் ராஜேந்திரனிடம் சனிக்கிழமை காவல் ஆய்வாளர் உஷா விசாரணை நடத்தினார்.

இந்நிலையில், ஆள்மாறாட்ட புகார் குறித்து ஏற்கெனவே உதித்சூர்யாவிடம் தேனி மருத்துவக் கல்லூரி நிர்வாகம் சார்பில் விசாரணை நடத்திய மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் எழிலரசன், பேராசிரியர்கள் ஜெயந்தி, ரெத்திகா, விஜயலட்சுமி ஆகியோரிடம் தனிப்படை காவல் ஆய்வாளர் உஷா, சார்பு ஆய்வாளர் அசோக் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தினர். தொடர்ந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி அலுவலர்கள், கல்லூரி மற்றும் விடுதி மாணவர்களிடம் விசாரணை நடத்த உள்ளதாக தனிப்படை போலீஸார் கூறினர்.

மும்பை செல்கிறது தனிப்படை: மாணவர் உதித்சூர்யா ஏற்கெனவே கடந்த 2017 மற்றும் 2018ஆம் ஆண்டு சென்னையில் உள்ள தேர்வு மையத்தில் "நீட்' தேர்வு எழுதியதாகவும், இந்த ஆண்டு அவர் மும்பையில் உள்ள தனியார் "நீட்' தேர்வு பயிற்சி மையம் ஒன்றில் சேர்ந்து படித்ததும் தனிப்படை போலீஸார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

மேலும் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள தேர்வு மையம் ஒன்றில் உதித்சூர்யா பெயரில் ஆள்மாறாட்டம் செய்து "நீட்' தேர்வு எழுதியிருப்பது தெரிய வந்துள்ளதால், விரைவில் மும்பை சென்று விசாரணை நடத்த உள்ளதாக தனிப்படை போலீஸார் கூறினர்.

இந்த நிலையில், விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com