விலை உயர்வு தொடர்ந்தால் வெங்காயத்தை அரசே கொள்முதல் செய்யும்: தமிழக அரசு

வெங்காயம் விலை உயர்வு தொடர்ந்தால் அரசே அதிகளவில் கொள்முதல் செய்து மக்களுக்கு விற்பனை செய்யும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
விலை உயர்வு தொடர்ந்தால் வெங்காயத்தை அரசே கொள்முதல் செய்யும்: தமிழக அரசு


வெங்காயம் விலை உயர்வு தொடர்ந்தால் அரசே அதிகளவில் கொள்முதல் செய்து மக்களுக்கு விற்பனை செய்யும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பிற பகுதிகளைப் போன்று தமிழகத்திலும் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்திருக்கிறது. மாநிலத்தின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றான சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.50 வரையிலும், சில்லறை விற்பனைக் கடைகளில் கிலோ ரூ.65 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வெங்காயம் விலை உயர்வு குறித்து ஆலோசிக்க, கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டாக திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரிய வெங்காயமானது தமிழக அரசின் பண்ணை பசுமை கடைகளில் கிலோவுக்கு ரூ.45 முதல் ரூ.46 வரையிலும், வெளிச் சந்தையில் ரூ.55 முதல் ரூ.60 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையைத் தாண்டி அதிக விலைக்கு விற்கப்படவில்லை. தமிழகத்துக்கு மகாராஷ்டிரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயம் அதிகளவில் வருகிறது. அந்த மாநிலங்களில் மழை பெய்ததால் வெங்காயத்தின் வரத்து குறைந்தது. இதுவே விலை உயர்வுக்குக் காரணமாகும்.
வெங்காயம் வரத்து அதிகம்: மகாராஷ்டிர மாநிலத்தின் நாசிக், ஆந்திரம் ஆகிய பகுதிகளில் இருந்து பெரிய வெங்காயமானது அதிகளவில் சென்னை கோயம்பேடு சந்தைக்கு வந்து கொண்டிருக்கின்றன. இதனால், அடுத்த இரண்டு அல்லது மூன்று நாள்களில் விலை குறைய வாய்ப்புள்ளது. விலை தொடர்பான நிகழ்வுகளை அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. எங்கும் பதுக்கல் இல்லாமல் பொது மக்களுக்கு எந்தவித சிரமமும் இல்லாமல் வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் போன்று, நிகழாண்டிலும் தேவைப்படும் போது சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும். விலைக் கட்டுப்பாட்டு நிதியம் மூலமாக வெங்காயத்தை அரசே கொள்முதல் செய்து நுகர்வோருக்கு குறைந்த விலையில் விற்பனை செய்ய முதல்வரின் உத்தரவைப் பெற்று நுகர்வோரின் நலன் பாதுகாக்கப்படும் என 
செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com