எம்பிபிஎஸ் கலந்தாய்வை ரத்து செய்வது சாத்தியமற்றது: மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்ற கிளை

வெளி மாநில மாணவர்கள் பங்கேற்றதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில், தமிழகத்தில் நடந்த மருத்துவக் கல்வி கலந்தாய்வை  முற்றிலும் ரத்து செய்து விட்டு புதிய கலந்தாய்வை நடத்துவது என்பது
எம்பிபிஎஸ் கலந்தாய்வை ரத்து செய்வது சாத்தியமற்றது: மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்ற கிளை

வெளி மாநில மாணவர்கள் பங்கேற்றதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில், தமிழகத்தில் நடந்த மருத்துவக் கல்வி கலந்தாய்வை  முற்றிலும் ரத்து செய்து விட்டு புதிய கலந்தாய்வை நடத்துவது என்பது சாத்தியமில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும், சந்தேகம் உள்ள மாணவர்களின் சான்றிதழ்களை சரிபார்த்து தமிழக அரசே நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறி, மருத்துவக் கலந்தாய்வை ரத்து செய்யக் கோரி மதுரையைச் சேர்ந்த சோம்நாத், நேயா, ஸ்ரீலயா ஆகியோர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

இவர்கள் தாக்கல் செய்த மனுவில்,  ஜூலை 6-ஆம் தேதி தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. 8-ஆம் தேதி மருத்துவ இளங்கலை படிப்புக்கு கலந்தாய்வு தொடங்கியது. 15-ஆம் தேதி தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது. இதில் தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற வரைமுறை இல்லை. இதைப் பயன்படுத்தி, பிற மாநிலத்தவர்கள் அதிக அளவில் சேருகின்றனர். தமிழக மாணவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

எனவே 2019 - 20-ஆம் ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையை ரத்து செய்து வேண்டும், கலந்தாய்வு பட்டியலில் பிற மாநில மாணவர்களை நீக்கிவிட்டு புதிய கலந்தாய்வு பட்டியலை வெளியிட்டு, அதன்படி கலந்தாய்வை நடத்த உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.  இந்த வழக்கை முன்பே விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை, தமிழக சுகாதாரத்துறைச் செயலரிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்குரைஞருக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு ஆகஸ்ட் 19-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலில் இடம்பெற்றவர்கள் தகுதியின் அடிப்படையில்தான் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, பிற மாநிலத்தவர்கள் என கூறப்படும் 126 மாணவர்களை வழக்கில் எதிர்மனுதாரராக சேர்த்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் மாணவர்கள் எதன் அடிப்படையில் கலந்தாய்வில் பங்கேற்றனர் என்பதோடு அவர்களின் இருப்பிடச் சான்று குறித்தும் பதிலளிக்க உத்தரவிட்டு, ஆகஸ்ட் 26-ஆம் தேதிக்கு வழக்கை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது. 
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆர். சுரேஷ்குமார் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் மாணவர்களின் ஆவணங்கள் முறையாக பரிசீலிக்கப்பட்டப் பிறகே, கலந்தாய்வுக்கான அழைப்பு விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. 
இதையடுத்து நீதிபதி, கலந்தாய்வு அழைப்பு குறித்த விவரங்களை நீதிமன்றம் அறிய விரும்புகிறது. அதற்காக தான் வெளிமாநிலத்தவர் என கூறப்படும் 126 பேரும் எதிர்மனுதாரராக வழக்கில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலர் பிற மாநிலங்களில் நிரந்தரமாக குடியேறியவர்களாக உள்ளனர். அவர்களுக்கு எதன் அடிப்படையில் தமிழகத்தில் இருப்பிடச் சான்று வழங்கப்பட்டது? என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, அரசு மற்றும் கலந்தாய்வில் அழைக்கப்பட்ட பிற மாநில மாணவர்கள் என கூறப்படும் 126 பேரும் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதி ஒத்திவைத்திருந்தார்.

இந்த நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, போலியாக இருப்பிடச் சான்றிதழ் அளித்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவ, மாணவிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்றும், மருத்துவக் கலந்தாய்வை முற்றிலும் ரத்து செய்வது சாத்தியமில்லாதது என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com