ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்ட ஐம்பொன் நடராஜர் சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்காகச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் திங்கள்கிழமை கொண்டு வந்த நடராஜர் சிலை.
கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்காகச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் திங்கள்கிழமை கொண்டு வந்த நடராஜர் சிலை.


ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்ட ஐம்பொன் நடராஜர் சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியிலுள்ள 700 ஆண்டுகள் பழைமையான குலசேகரமுடையான் சமேத அறம் வளர்த்த நாயகி அம்மன் கோயிலிலிருந்து 1982-ஆம் ஆண்டு காணாமல்போன நடராஜர் சிலை, ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கண்டறிந்தனர். 
தொல்லியல் துறையின் உதவியுடன் அந்த சிலையை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, செப். 11-ஆம் தேதி பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை தடுப்பு பிரிவினரிடம் அந்த சிலையை ஆஸ்திரேலிய அரசு ஒப்படைத்தது. 
தமிழகம் கொண்டு வரப்பட்ட அந்த ஐம்பொன் நடராஜர் சிலையை,  சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்துக்குச் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ஆர். ராஜாராம், வி. மலைச்சாமி, துணைக் காவல் கண்காணிப்பாளர் கதிரவன் மற்றும் போலீஸார் திங்கள்கிழமை கொண்டு வந்தனர்.  அப்போது, நீதிமன்ற வளாகத்தில் இச்சிலைக்கு விஸ்வ இந்து பரிஷத், இந்து மக்கள் கட்சி, சிவனடியார்கள் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் மலர் தூவியும், சிவபூத கன வாத்திய இசைக் கருவிகள் இசைத்தும் வரவேற்பு அளித்தனர். இச்சிலையை ஏராளமானோர் வழிபட்டனர்.
பின்னர், நீதிபதி முன்னிலையில் நடராஜர் சிலை வைக்கப்பட்டது. அப்போது நீதிமன்ற ஊழியர்கள் சிலையின் எடை, உயரம், அகலம் ஆகியவற்றை அளவீடு செய்தனர். இதனிடையே, இச்சிலையைக் கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையான் கோயிலில் சேர்ப்பிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் அக்கோயில் செயல் அலுவலர் வெங்கடேசன், குருக்கள் கிருஷ்ணமூர்த்தி மனு தாக்கல் செய்தனர்.இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி, மீட்கப்பட்ட சிலையைக் கோயிலில் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்றும், அங்கு சிலைக்குக் காவல் துறை சார்பில் போதிய பாதுகாப்புகள் வழங்கப்பட வேண்டும் எனவும், 24 மணிநேரமும் சுழற்சி முறையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, நடராஜர் சிலையை கும்பகோணத்திலிருந்து கல்லிடைக்குறிச்சிக்குச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் சென்றனர்.
இதுகுறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தெரிவித்தது: கல்லிடைக்குறிச்சி நடராஜர் சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த சிலை 30 கிலோ 300 கிராம் எடையும், 75 செ.மீ. உயரமும், 47 செ.மீ. அகலமும் உடையது. நீதிமன்ற ஆணைப்படி இச்சிலையைக் கோயில் நிர்வாகத்திடம் செவ்வாய்க்கிழமை (செப்.24) ஒப்படைக்க உள்ளோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com