டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ தேர்வு முறையில் மாற்றமா?

தமிழகத்தில் காலியாக உள்ள பல்வேறு அரசுப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி)  பல்வேறு நிலைத் தேர்வுகளை நடத்துகிறது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ தேர்வு முறையில் மாற்றமா?

தமிழகத்தில் காலியாக உள்ள பல்வேறு அரசுப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி)  பல்வேறு நிலைத் தேர்வுகளை நடத்துகிறது. அதில், சார் பதிவாளர், வருவாய்த் துறை உதவியாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு குரூப் 2 தேர்வு நடத்தப்படுகிறது.

குரூப் 2 தேர்வில் வெற்றி பெற மூன்று நிலைகளைக் கடக்க வேண்டும்.  முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல். இந்த மூன்று நிலைகளிலும் வெற்றிபெறும் பட்சத்தில் அவர்களுக்கு அரசுப் பணியிடங்கள் வழங்கப்படும். இந்தத் தேர்வில் பங்குபெற பட்டப்படிப்பு முடித்திருந்தால் போதுமானது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கேள்விகள் இருக்கும். நீங்கள் விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். 

இதேபோன்று குரூப் 2ஏ தேர்வானது பல்வேறு துறைகளில் உதவியாளர், கிளார்க், ஸ்டெனோ - டைபிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு நடத்தப்படுகிறது. இதில், மூன்று நிலைகள் அல்லாமல் ஒரே ஒரு போட்டித் தேர்வு மட்டுமே நடத்தப்படும். நேர்முகத் தேர்வு கிடையாது. 

இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி, குரூப் 2 தேர்வில் சில மாற்றங்களைக் கொண்டு வரப்போவதாக செய்திகள் பரவி வருகின்றன. தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, 'குரூப்-2 & குரூப் 2ஏ தேர்வுக்கான அறிவிக்கைகள் அடுத்த மாதம் வெளியிடப்படவுள்ளன. மேலும், குரூப் 2 தேர்வில் மாற்றங்கள் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவது உண்மை தான்' என்று கூறினார். 

குரூப் 2 தேர்வில் முதன்மைத் தேர்வு வினாக்களில் மாற்றங்கள் அல்லது குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ ஆகிய இரண்டு தேர்வுகளும் ஒன்றாக நடத்தப்பட வாய்ப்பிருப்பதாக போட்டித்தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் கல்வியாளர்கள் கூறுகின்றனர். 

கடந்த ஆண்டு முதல் குரூப் 4 தேர்வு மற்றும் வி.ஏ.ஓ தேர்வு இரண்டும் ஒன்றாக நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

அவ்வாறு இல்லையெனில் குரூப் 2ஏ தேர்வில் சில மாற்றங்கள் கொண்டுவரவுள்ளதாகத் தெரிகிறது. குரூப் 2 தேர்வைப் போன்று குரூப் 2ஏ தேர்விலும் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என்று கொண்டு வர வாய்ப்பிருப்பதாகக்  கூறப்படுகிறது. இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதுமட்டுமின்றி, குரூப் 2 தேர்வில் தமிழ்/ஆங்கிலம் பாடத்தில் இருந்து 100 கேள்விகள் மற்றும் கணிதம் & பொது அறிவு பாடத்தில் இருந்து 100 கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதிலும் மாற்றம் ஏற்படலாம் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும்,  டிஎன்பிஎஸ்சி-யில் இருந்து விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தற்போது போட்டித்தேர்வுகள் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளதாலும், அரசுத் தேர்வுகளுக்கு தேர்வர்களிடையே போட்டி அதிகரித்துள்ளதாலும் இந்த மாற்றங்கள் கொண்டு வரப்படலாம்.

முன்னதாக, மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வுகள் மற்றும் வங்கித் தேர்வுகள் அனைத்துமே முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என்ற முறையில் மாற்றப்பட்டு வருவதால் குரூப் 2ஏ தேர்வும் அவ்வாறு மாற்றப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com