Enable Javscript for better performance
music release function: K.S. Azhagiri support- Dinamani

சுடச்சுட

  

  பிகில் இசை வெளியீட்டு விழா: நோட்டீஸ் அனுப்பிய உயர்கல்வித் துறைக்கு கே.எஸ். அழகிரி எச்சரிக்கை!

  By DIN  |   Published on : 25th September 2019 03:37 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  alagiri

   

  தனியார் பொறியியல் கல்லூரிக்கு தமிழக அரசின் உயர்கல்வித்துறை வழங்கிய நோட்டீசை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக எச்சரிக்கிறேன் என்று கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

  இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் திரைப்பட உலகத்தினரால் இளைய தளபதி என்று அன்பு பெருக்கோடு அழைக்கப்படுகிற நடிகர் விஜய் அவர்களின் பிகில் திரைப்பட ஒலி நாடா வெளியீட்டு விழாவுக்கு அனுமதி வழங்கியதற்காக சாய்ராம் பொறியியல் கல்லூரி நிர்வாகத்திற்கு தமிழக அரசின் உயர்கல்வித்துறை செயலாளர் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். அதில் கல்லூரி வளாகத்தில் அரசியல் நிகழ்ச்சிகள் நடப்பதற்கு அனுமதி அளித்தது விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். 

  ஆனால், இந்நிகழ்ச்சி கல்லூரி வளாகத்திற்கு வெளியே அமைக்கப்பட்ட அரங்கத்தில் தான் நடைபெற்றிருக்கிறது.

  இந்நிலையில் இது ஒரு அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகமாகும். பிகில் திரைப்பட ஒலி நாடா வெளியீட்டு விழாவில் அரங்கத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் நடிகர் விஜய் உரையாற்றியதில் சில கருத்துக்கள் ஆளும் அ.தி.மு.க.வினருக்கு எதிராக கூறியதாக தவறாக புரிந்து கொண்டு இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளில் தமிழக அரசின் உயர்கல்வித்துறை ஏவி விடப்பட்டிருக்கிறது. இதன்மூலம் பிகில் திரைப்பட லி நாடா வெளியீட்டு விழாவிற்கு அனுமதி வழங்கியதற்காக மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டு, அச்சுறுத்தலுக்கு கல்லூரி நிர்வாகம் இரையாக்கப்பட்டிருக்கிறது.  இது ஒரு அரசியல் நிகழ்ச்சி அல்ல. கலைத்துறை சம்மந்தப்பட்ட நிகழ்ச்சியாகும். எனவே, இதைவிட ஜனநாயக விரோத, பாசிச நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது.

  கடந்த காலங்களில் சென்னை சட்டக் கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழாக்களில் மாணவர் சங்க அழைப்பின் பேரில் பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். என இன்னும் பல அரசியல் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றி இருக்கிறார்கள். இதைப்போல தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் நடைபெறுகிற விழாக்களிலே அரசியல் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள் கலந்து கொள்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

  இதை எதிர்த்து யாரும் குற்றம், குறை கூறியதில்லை. இதை அனுமதித்த கல்லூரி நிர்வாகத்தினருக்கு எந்த அரசும் நோட்டீஸ் அனுப்பி மிரட்டியது கிடையாது. ஜனநாயகத்தில் இத்தகைய நடைமுறைகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

  பிகில் திரைப்பட ஒலி நாடா வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஜய், எந்த அரசியல் கட்சியையும் சாராதவர். எந்த அரசியல் கட்சியையும் ஆதரித்தவர் அல்ல. மாறாக, தமிழகத்தில் இருக்கிற லட்சக்கணக்கான இளைஞர்களால் ஈர்க்கப்பட்டு, போற்றப்படுகிற அற்புதமான ஒரு இளம் கலைஞர். ஒலி நாடா வெளயீட்டு விழாவில் அவரது உரையில் எந்த அரசியல் கட்சியையும் குறிப்பிட்டு அவர் பேசவில்லை. அவர் பொதுவாக பேசியதை ஆளும் அ.தி.மு.க.வினருக்கு எதிராக பேசியதாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

  கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்பாக சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் மாணவிகளிடையே உரையாற்ற அனுமதிக்கப்பட்ட நிகழ்ச்சிக்கு எதிராக இதே தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியது. அன்று இச்செயலை அனைத்து எதிர்கட்சிகளும் வன்மையாக கண்டித்தன. அதேபோல, இன்றைக்கு நடிகர் விஜய் பங்கேற்ற ஒலி நாடா வெளியீட்டு விழா நடத்த அனுமதித்ததற்காக சாய்ராம் பொறியியல் கல்லூரிக்கு தமிழக அரசின் உயர்கல்வித்துறை வழங்கிய நோட்டீசை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அப்படி திரும்பப் பெறவில்லை எனில் கடும் விளைவுகளை தமிழக ஆட்சியாளர்கள் சந்திக்க நேரிடும் என தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக எச்சரிக்கிறேன் என்று கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai