கோப்புப்படம்
கோப்புப்படம்

"நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம்: மேலும் 3 மாணவர்கள் உள்பட 5 பேர் கைது

"நீட்' தேர்வு  ஆள்மாறாட்ட முறைகேடு வழக்கில்  மேலும் 3 மாணவர்கள் உள்பட 5 பேரை சிபிசிஐடி போலீஸார்  சனிக்கிழமை கைது செய்தனர்.

"நீட்' தேர்வு  ஆள்மாறாட்ட முறைகேடு வழக்கில்  மேலும் 3 மாணவர்கள் உள்பட 5 பேரை சிபிசிஐடி போலீஸார்  சனிக்கிழமை கைது செய்தனர்.

"நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டில் சேர்ந்த சென்னை, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த மாணவர் உதித்சூர்யா, அவரது தந்தை மருத்துவர் வெங்கேடசன் ஆகியோரை கடந்த 26 ஆம் தேதி சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். உதித் சூர்யா, வெங்கேடசன் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில், கேரளத்தைச் சேர்ந்த இடைத்தரகர் ரஷீத் என்பவர் மூலம் ஆள்மாறாட்ட முறைகேட்டில் ஈடுபட்டதும், இதே போல மேலும் சிலர் "நீட்' தேர்வில் முறைகேடு செய்து மருத்துவப் படிப்பில் சேர்ந்திருப்பதும் தெரிய வந்தது.

சென்னை மாணவர்கள் சிக்கினர்: இத் தகவலின் அடிப்படையில், "நீட்' தேர்வை முறைகேடு செய்து எழுதி மருத்துவக் கல்லூரி சேர்க்கை பெற்றதாக சென்னை, குரோம்பேட்டையில் உள்ள பாலாஜி மருத்துவக் கல்லூரி முதலாமாண்டு மாணவர் பிரவீண், அவரது தந்தை சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர் சரவணன்,  சென்னை, காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி முதலாமாண்டு மாணவர் ராகுல், அவரது தந்தை  சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த கேபிள் ஒப்பந்ததாரர் டேவிஸ்,  திருவள்ளூர் மாவட்டம், திருப்போரூரில் உள்ள சத்தியசாயி மருத்துவக் கல்லூரி முதலாமாண்டு மாணவி அபிராமி, விழுப்புரத்தைச் சேர்ந்த அவரது தாயார் ஆகியோரை தேனி சிபிசிஐடி அலுவலகத்துக்கு போலீஸார் விசாரணைக்கு அழைத்து வந்தனர்.  அவர்களிடம் சிபிசிஐடி காவல் துணை கண்காணிப்பாளர் காட்வின் ஜெகதீஷ்குமார் விசாரணை நடத்தினார். பின்னர் பிரவீண், அவரது தந்தை சரவணன், ராகுல், அவரது தந்தை டேவிஸ், மாணவி அபிராமி ஆகிய 5 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.

மாணவர் தலைமறைவு: "நீட்' தேர்வு ஆள்மாறாட்ட புகாரில் தொடர்புடைய தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி முதலாமாண்டு மாணவர் இர்பான் என்பவர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.  

இதில் ஏற்கெனவே கைதாகி சிறையில் உள்ள மாணவர் உதித் சூர்யா, தற்போது கைதாகியுள்ள மாணவர்கள் பிரவீண், ராகுல், மாணவி அபிராமி ஆகியோர் ஒரே இடைத்தரகர் மூலம் "நீட்' தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், இவர்கள் ஏற்கனவே "நீட்' தேர்வு எழுதி தோல்வியடைந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

இடைத் தரகருக்கு  வலை வீச்சு: ஆள்மாறாட்டப் புகாரில் முக்கியக் குற்றவாளியான கேரளத்தைச் சேர்ந்த இடைத் தரகர் ரஷீத் என்பவரை சிபிசிஐடி போலீஸார் தேடி வருகின்றனர். ரஷீத் கேரளத்தில் போட்டித் தேர்வு பயிற்சி மையம் நடத்தி வருவதாகவும், அவருக்கு பல்வேறு மாநிலங்களிலும் உள்ள பயிற்சி மையங்களுடன் தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதில் ரஷீத் சிக்கினால், இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் பலர் குறித்து தெரிய வரும் என்று போலீஸார் கூறினர்.

கல்லூரி முதன்மையர் புகார் : இதனிடையே தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவர் உதித் சூர்யாவின் வருகை பதிவேடுகளுக்கான ஆவணங்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இந்நிலையில் ஆவணங்களை திருத்தியதாக அக்கல்லூரியின் உதவி பேராசிரியர்கள் வேல்முருகன், திருவேங்கடம் ஆகிய இருவர் மீது க.விலக்கு காவல் நிலையத்தில் கல்லூரி முதன்மையர் ராஜேந்திரன் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் கூறியிருப்பதாவது: மாணவர் உதித்சூர்யா மீது கடந்த 11-ஆம் தேதி மின்னஞ்சல் மூலம் வந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது நிர்வாக ரீதியாக விளக்கம் கேட்கப்பட்டது. அதில் அவர் சரியான பதில் அளிக்காத நிலையில், உதித்சூர்யா மீதான புகார் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி மாநில மருத்துவ இயக்குநரகம் மற்றும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வருகை பதிவேட்டில் திருத்தங்கள் உள்ளது குறித்து எழுந்த புகாரை அடுத்து மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற விசாரணையில், உதித்சூர்யா கல்லூரியை விட்டு சென்ற நிலையில், கடந்த 12-ஆம் தேதி மாணவரின் வருகையில் உதவி பேராசிரியர்கள் வேல்முருகன் , திருவேங்கடம் ஆகிய இருவரும் குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்துள்ளனர். 

எனவே இவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதன்மையருக்கு மிரட்டல்: இச்சம்பவத்தில் உதித் சூர்யா தரப்பினருக்கு கல்லூரிக்கு வெளியிலும் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திலும் உதவும் நோக்கில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். 

தற்போது அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க உள்ள நிலையில் இதுகுறித்து மருத்துவத் துறைக்கு புகார் அளித்துள்ளேன். இதன்காரணமாக எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக க.விலக்கு காவல் நிலையத்தில் அளித்துள்ள மேலும் ஒரு புகாரில் முதன்மையர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த புகார்கள் குறித்து ஆண்டிபட்டி காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் கூறியது: மருத்துவக் கல்லூரி முதன்மையர் அளித்துள்ள புகார்களை தற்போது பெற்றுக் கொண்டுள்ளோம். வழக்கு சிபிசிஐடி வசம் உள்ளதால் உதவி பேராசிரியர் குறித்து முதன்மையர் அளித்த புகாரை சிபிசிஐடி வசம் ஒப்படைக்க உள்ளோம். 

உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர் அளித்துள்ள புகாருக்கு ஆதாரங்கள் ஏதேனும் இருந்தால் அதுகுறித்து விசாரணை நடத்தி வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com