ஐஐடி-சென்னை பட்டமளிப்பு விழா உரை.. பெற்றோரின் தியாகத்தை குறிப்பிட்டுப் பேசிய மோடி

ஐஐடி-சென்னையின் 56வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார்.
ஐஐடி-சென்னை பட்டமளிப்பு விழா உரை.. பெற்றோரின் தியாகத்தை குறிப்பிட்டுப் பேசிய மோடி

சென்னை: ஐஐடி-சென்னையின் 56வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார்.

பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்திய பிரதமர் மோடி, விழாவில் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், ஐஐடி சென்னையின் 56வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றது பெருமை கொள்ளச் செய்கிறது. மிகச் சிறந்த கல்வி நிறுவனம் ஒன்றில் படித்து பட்டம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு எனது வாழ்த்துகள் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய மோடி, பெற்றோரின் தியாகத்தால்தான் மாணவர்கள் உயர்ந்த இடத்தை அடைகின்றனர். பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவன ஊழியர்களுக்கு மாணவ, மாணவிகள் எழுந்து நின்று கைதட்ட வேண்டும் என்று மோடி கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து,  ஐஐடி மாணவ, மாணவிகள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி பெற்றோரின் தியாகத்துக்கு தங்களது நன்றியையும், ஊழியர்களின் பணிக்கு தங்களது பாராட்டுகளையும் தெரியப்படுத்தினர்.

பிறகு அவர் பேசுகையில், ஐஐடியில் தங்களது பிள்ளைகளை சேர்க்க பெற்றோர் பெரும் தியாகத்தை செய்துள்ளனர். உலகின் மிக மூத்த மொழியான தமிழ் மொழி பேசும் மாநிலத்தில் நாம் தற்போது இருக்கிறோம். மாணவர்களின் வெற்றியில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பங்கு பெரிதும் உள்ளது. ஆசிரியர்களின் ஓய்வில்லா உழைப்புத்தான் மாணவர்களின் பிரகாசமான எதிர்காலத்துக்கு அடிப்படையாக உள்ளது.

சமீபத்தில் அமெரிக்காவில் உலக நாட்டுத் தலைவர்கள் பலரையும் சந்தித்தேன். அறிவியல், தொழில்நுட்பத் துறைகளில் உலக அரங்கில் இந்தியர்கள்தான் முன்னிலையில் உள்ளனர். குறிப்பாக ஐஐடி மாணவ, மாணவிகள்தான் இந்தியாவை செழுமை அடையச் செய்து வருகிறார்கள் என்று உரையாற்றினார்.

இந்தியாவின் தனித்துவமான கண்டுபிடிப்புகள், எதிர்காலத்தில் சர்வதேச அளவில் உரிய இடத்தைப் பிடிக்க வேண்டும். 21ம் நூற்றாண்டின் தேவையைக் கருத்தில் கொண்டு கற்பிக்கும் பணியை முதலில் துவக்கியது ஐஐடிதான் என்றும் மோடி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com