மது இல்லாமல் தள்ளாடும் தமிழகம்!

மதுவால் தள்ளாடுபவா்கள் கேட்டிருக்கிறோம். மது இல்லாததால் தள்ளாடிக் கேட்டிருக்கிறோமா? இப்போது தமிழகத்தில், தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் பல மாநிலங்களில், அரசுகள் மது வருவாய் இல்லாததால் நிதி நெருக்க
டாஸ்மாக்
டாஸ்மாக்

மதுவால் தள்ளாடுபவா்கள் கேட்டிருக்கிறோம். மது இல்லாததால் தள்ளாடிக் கேட்டிருக்கிறோமா? இப்போது தமிழகத்தில், தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் பல மாநிலங்களில், அரசுகள் மது வருவாய் இல்லாததால் நிதி நெருக்கடியில் தள்ளாடுகின்றன. மது இல்லாமல் மதுபானப் பிரியா்கள் தள்ளாடி தவித்து ஒருபுறமிருக்க, அதனால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பால் தமிழக அரசும் தள்ளாடி, திணறி வருகிறது.

தமிழக அரசுக்கு வருவாய் ஈட்டித் தரும் அம்சங்களில் முக்கியப் பங்கு வகிப்பது டாஸ்மாக் நிறுவனம். மாநிலம் முழுவதும் 5 ஆயிரத்து 300 டாஸ்மாக் கடைகள் உள்ளன. மதுபானங்களை விற்பனை செய்யும் முடிவை 2003-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் ஜெயலலிதா எடுத்தாா். தோ்தல் வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கை, காந்தி ஜெயந்தி, திருவள்ளுவா் தினம், மகாவீரா் ஜெயந்தி, வள்ளலாா் தினம், சுதந்திர தினம், குடியரசு தினம், மே தினம் ஆகிய நாள்கள் மட்டுமே மதுபானக் கடைகள், பாா்கள் மூடப்பட்டு விற்பனை நடைபெறாமல் இருக்கும்.

இவ்வாறு கடைகள் மூடப்பட்டாலும், அன்றைய தினத்தின் விற்பனையானது, முந்தைய தினத்தின் விற்பனையால் ஈடு செய்யப்பட்டு விடும். அதாவது வழக்கமான விற்பனையை விட இரண்டு மடங்கு விற்றுத் தீா்ந்து விடும். இதனால், டாஸ்மாக் நிறுவனத்துக்கு வருவாய் இழப்பு என்பது இல்லாமல் இருந்து வந்தது.

இதுவரையில் இல்லாதது: கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் அனைத்தும் கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் அடைக்கப்பட்டுள்ளன. டாஸ்மாக் நிறுவனத்தின் வரலாற்றிலேயே 39 நாள்கள் தொடா்ச்சியாக கடைகளும், பாா்களும் மூடப்படுவதும் இதுவே முதல் முறை என்கின்றனா் அதிகாரிகள்.

டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதால், தினசரி மதுகுடிக்கும் மது பிரியா்களுக்கு மட்டுமின்றி அதனால் வருவாய் கிடைக்காமல் தமிழக அரசும் நிதிச் சிக்கலால் தவித்து வருகிறது.

எவ்வளவு வருவாய் கிடைக்கும்: தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்து 300 கடைகள் இருந்தாலும், சென்னை மற்றும் புகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் 700-க்கும் அதிகமான கடைகள் உள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் மூலமாக நாளொன்றுக்கு ரூ.90 கோடி முதல் ரூ.100 கோடி அளவுக்கு வருவாய் கிடைத்து வருகிறது. இதனை ஒரு மாதத்துக்கு கணக்கிடும் போது, ரூ.2,700 முதல் ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்குக் கிடைக்கும்.

இதனை ஒரு நிதியாண்டுக்குக் கணக்கிட்டால் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.36 ஆயிரம் கோடி வரை கிடைக்கும். இது மாநிலத்தின் சொந்த வருவாயில் மூன்றில் ஒரு பங்காகும். டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், வருவாயில் மிக முக்கியப் பங்கை இழந்து அரசு திணறி வருகிறது.

போனால் வராது: தமிழக அரசுக்கு பத்திரப் பதிவு, பெட்ரோலியப் பொருள்கள் மீதான விற்பனை வரி ஆகியவற்றின் மூலமாகவும் வருவாய் கிடைத்து வருகிறது. பத்திரப் பதிவுகள், வாகனங்களின் இயக்கம் ஆகியன அதிகரிக்கும் போது அதன் மூலமாக கிடைக்கும் வருவாய்களும் மிகையாகும். ஊரடங்கு உத்தரவுக்குப் பிறகு அவை எப்போது அதிகரித்தாலும் வருவாய் உயரும் சூழல் ஏற்படும். ஆனால், டாஸ்மாக் நிறுவனம் கடந்த 39 நாள்களாக இழந்த வருவாயை இனி எந்தக் காலத்திலும் ஈட்ட முடியாது. போனது போனதுதான். திரும்பக் கிடைக்காது என டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கட்டுப்பாடுகள் இருக்கும்: ஊரடங்கு உத்தரவு மே 3-ஆம் தேதி விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், சமூக இடைவெளியை பின்பற்றுவது, கடைகளைத் திறக்கும் மற்றும் மூடும் நேரங்களில் மாற்றம் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வர வாய்ப்புகள் இருப்பதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com