கனவில் வந்து சொன்னதால் முருகனுக்கு கோவில் கட்டிய விவசாயி

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே களரம்பட்டி கிராமத்தில் விவசாயி ஒருவரின் கனவில் வந்து சொன்னதால், முருகனுக்கு கோவில் கட்டி நித்திய பூஜை நடத்தி வருகிறார்.
விவசாயி முத்துச்சாமி கட்டியக் கோவில்
விவசாயி முத்துச்சாமி கட்டியக் கோவில்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே களரம்பட்டி கிராமத்தில் விவசாயி ஒருவரின் கனவில் வந்து சொன்னதால், முருகனுக்கு கோவில் கட்டி நித்திய பூஜை நடத்தி வருகிறார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதி கிராமங்களில், தமிழ் கடவுளாக வர்ணிக்கப்படும் முருகனுக்கு பக்தர்கள் அதிகம். அம்மன் கோவில் இருப்பதைப்போலவே பெரும்பாலான கிராமங்களில் முருகனுக்கும் கோவில் கட்டி வழிபாடு நடத்தி வருகின்றனர்.

வாழப்பாடி அருகே பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆரியபாளையம் களரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி முத்துசாமி (52). இவர் 13 வயது சிறுவனாக இருக்கும் போதே முருகக்கடவுள் கனவில் காட்சியளித்து சொன்னதால், களரம்பட்டி கிராமத்தில் மலைக்குன்று அடிவாரத்திலுள்ள தனது சொந்த நிலத்தின் ஒரு பகுதியில் முருகனுக்கு கோவில் கட்டி நித்திய பூஜை நடத்தி வருகிறார்.

பக்தர்களின் ஒத்துழைப்போடு பழனி மலை முருகன் கோவிலில் இருக்கும் தங்கத்தேரை போல மிக நேர்த்தியான ரதத்தேரை வடிவமைத்து, ஆடி கிருத்திகை, ஐப்பசி சூரசம்ஹாரம், வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் ஆகிய முருகனுக்கு உகந்த விசேச தினங்களில், தேரோட்டம் நடத்தி வருகிறார்.
ஆண்டுக்கு ஒருமுறை காவடி எடுத்துக் கொண்டு கால்நடையாகவே பழனிமலை  முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மாதத்திற்கு நான்கு முறை அன்னதானம் செய்து வருகிறார். பக்தர்களுடன் இணைந்து சுப்பரமணிய சுவாமி அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்தி முருகன் கோவிலை நிர்வகித்து வருகிறார்.

இதுகுறித்து களரம்பட்டி முருகன் கோவில் முத்துசாமி(52) கூறியதாவது,  “நான் 13 வயது சிறுவனாக இருக்கும்போதே பழனிமலைமுருகன் என் கனவில் வந்து காட்சியளித்து, எனது சொந்த நிலத்தில் அவருக்கு கோவில் எழுப்பிட உத்தரவிட்டார். இதனால் ஆறாம் வகுப்போடு படிப்பை நிறுத்தி விட்டு,  முருகனுக்கு கோவில் கட்ட காவடி எடுக்க தொடங்கி விட்டேன். பக்தர்கள், ஒத்துழைப்போடு தற்போதுள்ள கோவிலை கட்டி 8 ஆண்டுகளும், முருகனுக்கு ஐம்பொன் ரதத்தேர் வடிவமைத்து 3 ஆண்டுகள் ஆகிறது.” என்றார்.

மேலும், “சிறுவயதில் இருந்தே குடிசைக்குள் முருகனை வைத்து நித்திய பூஜை நடத்தி வழிபட்டு வந்தேன். அவரது உத்தரவின் பேரில் கோவில் கட்டியதால் எனது கனவு நனவாகியுள்ளது. முருகனின் வரத்தால் பிறந்த எனது மகனுக்கு திருஞானக்குமரன் என பெயரிட்டுள்ளேன். எனது மகனையும் முருகனுக்கு தொண்டு செய்திடவே வழிகாட்டுவேன்.” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ”பொது முடக்கத்தால் நித்திய பூஜை நடத்தி கோவிலை நிர்வகிப்பதற்கும், தொய்வின்றி அன்னதானம் செய்வதற்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இருப்பீனும், நித்திய பூஜையை கைவிடாமல் தொடர்ந்து வருகிறேன். பல்வேறு பகுதியைச் சேர்ந்த முருக பக்தர்களும் வந்து வழிபட்டு செல்வதற்கேற்ற வகையில், இந்த கோவிலை விரிவுபடுத்த வேண்டும் என்பதே எனது வாழ்வில் குறிக்கோளாக உள்ளது.” என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com