பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை மேம்படுத்த புதிய மாற்றங்கள்

இயற்கைப் பேரிடர்களால் பயிர்களுக்கு ஏற்படும் எல்லாவிதமான சேதங்களில் இருந்தும் உழவர்களைக் காக்கும் வகையில் "பசல் பீமா யோஜனா' எனப்படும் பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது
பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை மேம்படுத்த புதிய மாற்றங்கள்


இயற்கைப் பேரிடர்களால் பயிர்களுக்கு ஏற்படும் எல்லாவிதமான சேதங்களில் இருந்தும் உழவர்களைக் காக்கும் வகையில் "பசல் பீமா யோஜனா' எனப்படும் பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது மத்திய அரசு.

குறைவான தொகையை பிரீமியமாகச் செலுத்தி நிறைவான பலனைப் பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டுவரும் இந்தத் திட்டத்தை, காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு பெற்ற, கிராமப்புறங்களில் அதிக கிளைகளைக் கொண்ட ஐந்து அரசு நிறுவனங்களும், 13 தனியார் நிறுவனங்களும் செயல்படுத்தி வருகின்றன. கிராமப் பகுதிகளில் காப்பீட்டு நிறுவனங்களின் கட்டமைப்பையும் செயல்பாட்டையும் ஊக்குவிப்பதுடன், சிறப்பாகச் செயல்படும் தனியார் நிறுவனங்களைப் பயன்படுத்திக் கொள்வதும் இதன் நோக்கமாகும்.

கடந்த ஐந்து ஆண்டுகளாகச் செயல்படுத்தப்பட்டுவரும் இந்தத் திட்டத்தை இன்னும் சிறப்பாகச் செயல்படுத்துவதற்கு ஏற்ற வகையில், தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கவும், அனைத்து விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தவும் தேவையான மாற்றங்கள் அண்மையில் கொண்டுவரப்பட்டுள்ளன.

தனியார் நிறுவனங்கள் அதிக லாபத்தை குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகின்றன என்ற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால், இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட முதல் மூன்று ஆண்டுகளின் புள்ளிவிவரத் தகவல்களின்படி அது உண்மை அல்ல என்று தெரியவருகிறது.

இந்தக் காலகட்டத்தில், காப்பீட்டு நிறுவனங்கள் பிரீமியமாக வசூலித்த தொகையில் 89 சதவீதத்தை } அதாவது, வசூலிக்கப்பட்ட ஒவ்வொரு நூறு ரூபாயிலும் 89 ரூபாயை இழப்பீட்டுத் தொகையாக விவசாயிகளுக்கே திருப்பிக் கொடுத்துள்ளன.

காப்பீட்டு நிறுவனங்களின் வழக்கமான நிர்வாகச் செலவு, மறுகாப்பீட்டுச் செலவு ஆகியவற்றுக்கு ஆகும் 10 முதல் 12 சதவீத செலவைக் கணக்கில் கொண்டால், அவை உண்மையில் இழப்பைச் சந்தித்தன என்பதை அறியலாம். இதனால், நஷ்டம் ஏற்படும் ஆண்டுகளையும், லாபம் கிடைக்கும் ஆண்டுகளையும் சராசரிக்குக் கொண்டுவரும் வகையில், குறைந்தபட்சம் ஐந்தாண்டு காலத்துக்கான, தேசிய பேரிடர் மீட்புத் திட்டம் வகுக்கப்படுவது அவசியமானது.

அந்த வகையில், ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஒரு காப்பீட்டு நிறுவனம் ஈட்டும் லாபத்தை அல்லது நஷ்டத்தை மட்டுமே கணக்கில் கொண்டு ஒரு முடிவுக்கு வருவது சரியாக இருக்காது. கடந்த ஆண்டு (2019) சம்பா (கரீப்) பருவம் பயிர்களுக்கு உகந்ததாக அமைந்தது என்றாலும், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் எதிர்பாராத காலத்தில் பெய்த திடீர் மழையால், அறுவடைக்குத் தயாராக இருந்த தானியப் பயிர்கள் பெருமளவில் சேதமடைந்தன. அதனால், அந்த மாநிலங்களில் முறையே 121%, 213% இழப்பீடு வழங்க வேண்டியதாகி விட்டது.

விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் இழப்பீடு கிடைப்பதற்கு, மாநில அரசுகள் தங்கள் பங்கு பிரீமிய தொகையையும், தகவல்களையும் உடனுக்குடன் பகிர்ந்து கொள்வது அவசியம். சில நேரங்களில், இவை மாநில அரசுகளிடம் இருந்து கிடைப்பதில் ஏற்படும் தாமதம் காரணமாக, விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதிலும் தாமதம் ஏற்படுகிறது.

அரைகுறை தகவல்களின் அடிப்படையில், காப்பீட்டு நிறுவனங்கள்மீது குறைந்த அளவு இழப்பீடு வழங்கி, அதிக அளவு லாபம் ஈட்டுவதாக வைக்கப்படும் குற்றச்சாட்டுகள், இத்திட்டத்தையே தவறாகப் புரிந்துகொள்ள வழி ஏற்படுத்தி விடுகின்றன. சில நேரங்களில், முதலில் குறைவாக மதிப்பிடப்பட்டாலும், அந்தப் பருவத்துக்கான முழுமையான தரவுகள் கிடைக்கும்போது, இழப்பீட்டு விகிதம் கணிசமாக உயர்ந்து விடுகிறது.

தரவுகள் கிடைப்பதில் நிலவும் இடைவெளி காரணமாக ஏற்படும் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண, வேளாண் அமைச்சகம், ஒவ்வொரு மாதமும் அந்தந்த பருவத்திற்கான தகவல்களைத் திரட்டி வெளியிட்டு வருகிறது. இதனால், அண்மைத் தரவுகளின் அடிப்படையில், நிபுணர்கள் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் செயல்பாட்டைப் பற்றி ஆய்வு செய்து கருத்துகளை வெளியிட வழி ஏற்படுகிறது.

2016}17 முதல் 2018}19 வரையிலான மூன்றாண்டு காலத்துக்கான தரவுகள் ஓரளவு முழுமையாகக் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் ஆய்வு செய்தபோது, பொதுத்துறை நிறுவங்களின் இழப்பீட்டு விகிதம் 98.5 சதவீதமாகவும், தனியார்நிறுவங்களின் இழப்பீட்டு விகிதம் 80.3 சதவீதமாகவும் இருந்தது தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டின் (2019) சம்பா (கரீப்) பருவ விளைச்சல் அளவீடு குறித்த தரவுகள் குஜராத், ஜார்க்கண்ட், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் இருந்து இன்னும் பெறப்படவில்லை. குறுவை (ரபி) பருவப் பயிர்களுக்கு, ஆறு மாநிலங்களிடமிருந்து இன்னும் தரவுகள் பெறப்படாமல் நிலுவையில் உள்ளன. அந்தத் தரவுகளும் வந்து சேர்ந்தால், காப்பீட்டு நிறுவனங்கள் கடந்த நிதி ஆண்டில் அளிக்க வேண்டிய இழப்பீடு கணிசமாக உயர வாய்ப்பு உள்ளது.

நடப்பு சம்பா (கரீப்) பருவத்திலிருந்து செயல்பாட்டுக்கு வரும் புதுப்பிக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தின்படி, இழப்பீட்டு விகிதத்தில் ஏற்படும் மாற்றம் காரணமாக, அபரிமிதமான லாப நஷ்டத்தை ஈடுகட்டி, எதிர்கொள்ளும் வகையில், காப்பீட்டு நிறுவனங்களுக்கு தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்குப் பணி ஒதுக்க வகை செய்யப்பட்டுள்ளது.

இது பெறப்பட்ட பிரீமியம் தொகைக்கும், வழங்கப்பட்ட இழப்பீடுகளுக்கும் இடையிலான விகிதாசாரத்தை மதிப்பிடுவதற்கும் பொருத்தமான கால அளவாக இருக்கும்.

தொழில்நுட்ப அடிப்படையிலான விளைச்சல் மதிப்பீட்டு விதிமுறைகள், பயிர்க் காப்பீட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் சிறு விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும். இதற்காக அரசு முகமைகளோடு, சர்வதேச மற்றும் தனியார் தொழில்நுட்ப முகமைகளையும் பெருமளவில் பயன்படுத்த வேளாண் அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த நடைமுறைகள் அமலுக்கு வரும்போது, பயிர்க் காப்பீட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது எளிமையாகும்; விவசாயிகளுக்கு பலன்களை உரிய முறையில் கொண்டு சேர்ப்பது சாத்தியப்படும்.

தானிய விளைச்சலில் வரலாற்று சாதனை செய்தும், விளைச்சல் குறித்த தரவுகள் இல்லாததும், தரவுகளைக் கணக்கிடுவதிலும் பதிவு செய்வதிலும் ஏற்படும் மனிதத் தவறுகளும் பிரீமியம் கணக்கிடுவதில் தவறு ஏற்படக் காரணமாக இருக்கின்றன. இந்த நிலையை மாற்ற, செயற்கைக்கோள் புகைப்பட தொழில்நுட்ப அடிப்படையிலான விளைச்சல் மதிப்பீடு, வானிலை தொகுப்புத் தரவு, மண் ஈரப்பதத் தரவு ஆகிய தொழில்நுட்பங்கள் பிரீமிய விகிதங்களைக் கணக்கிடுவதிலும், திட்ட அமலாக்கத்தை முறைப்படுத்துவதிலும் பெரிய அளவில் உதவும்.

பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள இத்தகைய தொழில்நுட்ப மாற்றங்கள், பிரதமரின் "பசல் பீமா யோஜனா' திட்டத்தை செம்மையாகவும், சிறு குறு விவசாயிகளுக்கு அதிக அளவில் பலன் அளிக்கும் வகையிலும் செயல்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டுரையாளர்:செயலர், மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com