சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் 43 வருடங்களுக்குப் பிறகு வெள்ளநீர் புகுந்தது

சிதம்பரம் நடராஜர் கோயிலில் 43 வருடங்களுக்குப் பிறகு பிரகாரத்தில் வெள்ளநீர் முழங்காலுக்கு மேல் தண்ணீர் சூழ்ந்துள்ளது. 
சிதம்பரம் நடராஜர் கோயில்
சிதம்பரம் நடராஜர் கோயில்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் 43 வருடங்களுக்குப் பிறகு (1977 ஆண்டுக்குப் பிறகு) சிவகாமசுந்தரி சமேத நடராஜப்பெருமான் வீற்றிருக்கும் சித்சபை பிரகாரத்தில் வெள்ளநீர் முழங்காலுக்கு மேல் தண்ணீர் சூழ்ந்துள்ளது. 

நடராஜர் அபிஷேகத்திற்கு நீர் எடுக்கும் பரமானந்த கூடம் என்கிற புனித கிணற்றில் பல வருடங்களுக்குப் பிறகு முழுவதுமாக நிரம்பி வழிகிறது. சிவகங்கை தீர்த்த குளம் நீர் நிரம்பி மேல் மண்டபத்தை நீர் தொட உள்ளது. சிவகாமி அம்மன் கோயில் முழுவதும் மழை நீர் நிரம்பியுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள நீர் சிவகங்கை தீர்த்தகுளத்திற்கு வந்து உபரிநீர் வடக்கு கோபுரம் வழியாக பாதாள கால்வாய் வழியாக சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயில் குளத்திற்குச் செல்லும். செல்லும் வழியில் அடைப்பு ஏற்பட்டதால், கோயிலுக்குள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 

சிதம்பரம் நடராஜர் கோயிலில் வெள்ளநீர் புகுந்ததால், சிதம்பரம் உதவி ஆட்சியர் எல்.மதுபாலன், டிஎஸ்பி த.ஆ.ஜோ.லாமேக் ஆகியோர் கோயிலுக்குள் சென்று ஆய்வு செய்தனர். அப்போது பொதுமக்கள் மற்றும் தீட்சிதர்கள் இடுப்பளவு தண்ணீரில் நின்று சாமி தரிசனம் செய்ததைக் கண்டு, அவர்களைப் பாதுகாப்பு நலன் வெளியேறுமாறு அறிவுறுத்தினர்.

சிதம்பரத்தில் கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாது பெய்து வரும் தொடர் கனத்த மழையால் சிதம்பரம் முழுவதும் அனைத்து சாலைகளில் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது வியாழக்கிழமை இரவு பெய்த கன மழையில் சிதம்பரத்தின் மேற்குப் பகுதியில் உள்ள தச தீர்த்தத்தில் ஒன்றான இளமையாக்கினார் கோயில் குளத்தில் தண்ணீர் புகுந்து மதில் சுவர் இடிந்து விழுந்தது. 

அப்பகுதியிலிருந்த இரண்டு மின்சார கம்பம் குலத்திலே பாதி இறங்கிவிட்டது. அப்பகுதி நகராட்சியால் மக்கள் செல்ல தடை செய்யப்பட்டிருக்கிறது. இதுபோல் சிதம்பரம் நகரைச் சுற்றியுள்ள இந்திரா, நேருநகர், வாகீசநகர், மின்நகர், தில்லையம்மன் நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com