கூத்தாநல்லூர்: பொதக்குடியில் ஆபத்தான நிலையில் 50 தொகுப்பு வீடுகள்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம், பொதக்குடியில் 50 தொகுப்பு வீடுகள் ஆபத்தான நிலையில் உள்ளது. 
சிமிண்ட் காரை பெயர்ந்துள்ள தொகுப்பு வீடு
சிமிண்ட் காரை பெயர்ந்துள்ள தொகுப்பு வீடு

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம், பொதக்குடியில் 50 தொகுப்பு வீடுகள் ஆபத்தான நிலையில் உள்ளது. 

பொதக்குடி ஊராட்சியில், பொதக்குடி, சேகரை, மிளகுக் குளம், காந்தி காலனி, மணவாளி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் கட்டிக் கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகள் இடியும் நிலையில் உள்ளன. 

இதுகுறித்து, அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற திருவாரூர் மாவட்டத் தலைவர் சு.பாலசுப்ரமணியன் கூறியது. பொதக்குடி கிராமத்தில், அம்பேத்கர் தெரு மற்றும் ஜீவா தெரு உள்ளிட்ட தெருக்களில் கடந்த 1990 - 91 ஆம் ஆண்டுகளில், இந்திரா குடியிருப்புத் திட்டத்தில் இரட்டைக் காலனி எனப்படும், 50க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்குத் தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. 

2000ஆம் ஆண்டு முதல் 2010ஆண்டு வரை மேலும், 20 குடும்பங்களுக்கு இந்திரா குடியிருப்புத் திட்டத்தில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளைக் கடந்த பிறகு சில வீடுகள் பழுதானது. இந்நிலையில், 2018 ஆம் ஆண்டு வீசிய கஜா புயலில் பல வீடுகள் கடும் சேதம் அடைந்தன. மேலும், அண்மையில் நிவர் புயலால் ஏற்பட்ட மழையிலும், தற்போது தொடர்ந்து பெய்து வரும் கன மழையாலும், சேகரை கிராமத்தில் உள்ள தொகுப்பு வீடுகள் மிகவும் சேதம் அடைந்துள்ளன.

பொக்லைன் இயந்திரம் மூலம் மழை நீர் வெளியேற்றப்படுகிறது.
பொக்லைன் இயந்திரம் மூலம் மழை நீர் வெளியேற்றப்படுகிறது.

மேலும், தொடர் மழையால் தெருக்களில் மழை நீர் ஆறு போல் ஓடுகிறது. இதனால், வீடுகளில் ஊற்று போல் தண்ணீர் ஊரத் தொடங்கியுள்ளன. வீட்டில் குழந்தைகள், வயதானவர்கள் உள்ளிட்ட யாரும் இருக்க முடியாத நிலையும், வீடுகள் இடிந்து விழக்கூடிய ஆபத்தான நிலையும் ஏற்பட்டுள்ளன. தெருக்களில் ஓடக்கூடிய மழை நீர் வடிய வழியின்றி, ஆங்காங்கே தேங்கியுள்ளன. இதனால், சேகரை கிராமத்தோடு பொதக்குடி , மிளகுக் குளம், காந்தி காலனி, மணவாளி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள வாய்க்கால்கள் நிரம்பி வழிகிறது. 

உடனே, மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு, போர்க் கால அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார். தகவல் அறிந்த வட்டாட்சியர் ஜீவானந்தம், வருவாய் ஆய்வாளர் இளமாறன் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர். 

இதுகுறித்து வருவாய் ஆய்வாளர் இளமாறன் கூறியது, 

இப்பகுதியில் உள்ள தொகுப்பு வீடுகள் பழமையான வீடுகள்தான். இப்பகுதி தெருக்களில் தேங்கியுள்ள மழை நீரை பொக்லைன் இயந்திரம் மூலம் வெளியேற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், இப்பகுதியில் உள்ள 80 குடும்பங்களைச் சேர்ந்த 320 பேரையும், அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com