வாழப்பாடியில் இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இளைஞர்

சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அங்கக முறை இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
அங்கக இயற்கை முறையில் பயிரிட்டுள்ள நெல் வயலில் இளைஞர் பாண்டியராஜன்.
அங்கக இயற்கை முறையில் பயிரிட்டுள்ள நெல் வயலில் இளைஞர் பாண்டியராஜன்.

சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அங்கக முறை இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

என்னதான் அறிவியல் முன்னேற்றமும் நவீன கருவிகள் பயன்பாட்டிற்கு வந்தாலும், பசி பட்டினியின்றி மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு, தானியங்கள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட உணவாகும் விளைபொருட்களை விவசாயிகள் தொடர்ந்து உற்பத்தி செய்து வருவது முக்கிய காரணமாகும்.

விவசாயம் செய்பவர்களை ஏளனமான பார்த்த நிலை மாறி, அண்மைக்காலமாகப் போற்றி புகழும் அளவிற்கு விவசாயிகளின் மீதான மதிப்பு உயர்ந்துள்ளது. குறிப்பாக, உடலுக்கு தீங்கு விளைவிக்கும்
ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தாமல், அங்கக முறையில் இயற்கை விவசாயம் செய்வதில், மருத்துவம், பொறியியல் படித்தவர்கள் கூட ஆர்வத்தோடு ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. 

சேலம் மாவட்டம் வாழப்பாடி புதுப்பாளையத்தை சேர்ந்த இளைஞர் பாண்டியராஜன் (34). மிகுந்த ஆர்வத்தோடு இயற்கை முறை விவசாயத்தில் ஈடுபட்டு வருவதோடு, அங்கக முறை விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பயிற்சி அளித்து வருகிறார். பள்ளிப் பருவத்திலேயே பெற்றோரை இழந்த பாண்டியராஜன், பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்ததால், இயற்கை முறை விவசாயத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது. தனக்கு குறைந்தளவே விளைநிலம் இருந்தாலும், குத்தகைக்கு நிலம் பிடித்தும் இயற்கை முறை சாகுபடி செய்து வருகிறார்.

தனது நண்பர்கள், உறவினர்களுக்கு மட்டுமின்றி, ஆர்வத்தோடு வரும் மற்ற விவசாயிகளுக்கும்  இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, கூடுதல் மகசூல் பெற்று கணிசமான வருவாய் பெறுவதற்கு பயிற்சி அளித்துத் தொடர்ந்து வழிகாட்டி வருகிறார். இதுமட்டுமன்றி, இயற்கையாக விளையும் சிறு தானியங்கள், தேன், மதிப்புக்கூட்டப்பட்ட இயற்கை விளைபொருட்கள், தின்பண்டங்கள், மூலிகைச் சாறுகள் ஆகியவற்றையும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கொள்முதல் செய்து, வாழப்பாடியில் விற்பனை செய்து வருகிறார். இவரது வழிகாட்டுதலால் இயற்கை விவசாயத்திற்கு மாறி தரமான விளைபொருட்களையும் கூடுதல் வருவாயையும் பெற்ற விவசாயிகள் பலர் இவருக்குப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இயற்கை விவசாயி பாண்டியராஜன்(34) கூறியதாவது:

ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், களைக்கொல்லிகளை பயன்படுத்துவதால், விளைநிலங்கள் மலட்டுத் தன்மை அடைந்து வருகிறது. நிலத்திற்கு உயிரூட்டமளிக்கும் நுண்ணுயிர்கள் அழிந்து விடுகின்றன. இந்த உணவு தானியங்கள், காய்கறிகள் பழங்கள் உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களை உண்ணும் மனிதர்களுக்கும் தீங்கு ஏற்படுகிறது. 

பல்வேறு நோய்களுக்கும் ஆளாகின்றனர்.
ஆனால், இயற்கையான அங்கக முறையில் பயிரிட்டு விளைவிக்கப்படும் விளை பொருட்கள், உடலுக்கு உறுதியளிப்பதோடு, தோய்களை விரட்டும் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கிறது. நிலத்தையும், மனிதக் குலத்தையும் காக்க இயற்கை முறை விவசாயம் செய்து வருவதோடு, இது குறித்து நண்பர்கள், உறவினர்கள் மட்டுமின்றி, விவசாயிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். 

இதுமட்டுமின்றி, அங்கக முறை சாகுபடி நுட்பங்கள் குறித்து பயிற்சி அளித்து அறுவடை வரை வழிகாட்டி வருகிறேன். இதனால் மனநிறைவு கிடைக்கிறது. இயற்கை முறை சாகுபடி நுட்பங்கள் குறித்து அறிந்து கொள்ள 6369603478 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com