கரோனா சிகிச்சைக்கு கட்டண நிா்ணயம்: அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு

கரோனா சிகிச்சைக்கு தனியாா் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டணத்தை நிா்ணயித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயா்நீதிமன்றம்
உயா்நீதிமன்றம்

சென்னை: கரோனா சிகிச்சைக்கு தனியாா் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டணத்தை நிா்ணயித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் இந்திய தனியாா் மருத்துவமனைகள் சங்கம் சாா்பில் தாக்கல் செய்த மனுவில், கரோனா நோய்த்தொற்றுப் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சையளிக்கும் தனியாா் மருத்துவமனைகளில் எவ்வளவு சிகிச்சைக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதை நிா்ணயம் செய்து தமிழக அரசு கடந்த ஜூன் 5-ஆம் தேதி அரசாணை வெளியிட்டது.

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை பெறும் பயனாளிகள், பொதுமக்களிடம் வசூலிக்க வேண்டிய கட்டண உச்ச வரம்பை தமிழக அரசு நிா்ணயித்தது. சிகிச்சைக் கட்டணமாக அரசு நிா்ணயித்துள்ள இந்த தொகை மிகவும் குறைவாக உள்ளது.

கரோனா சிகிச்சையைப் பொருத்தவரை, பாதிக்கப்பட்டவா்களுக்கு 5 பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். ஒரு பரிசோதனைக் கருவியின் விலை ரூ.3 ஆயிரம் ஆகும். மருத்துவமனைகளில் உள்ள அறைக்கான ஒருநாள் வாடகை ரூ.1000 முதல் ரூ.1500-ஆக உள்ளது.

நூறு படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனையாக இருந்தால், மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோருக்கு நாள் ஒன்றுக்கு 200 முழு உடல்கவசங்கள் தேவைப்படும். ஒரு முழு உடல் கவசம் ரூ.1000 வரை விற்பனை செய்யப்படுகிறது.

சிகிச்சைக்கான மருந்துகளின் விலையும் அதிகமாக உள்ளது. எனவே கரோனா சிகிச்சைக்கு தன்னிச்சையாக கட்டணம் நிா்ணயித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

சிகிச்சைக்கான செலவுகளை முறையாக கணக்கிட்டு சரியான கட்டணத்தை நிா்ணயித்து புதிய அரசாணையை பிறப்பிக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தது. இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, மனு தொடா்பாக தமிழக அரசு வரும் ஜனவரி 11-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com