திமுக எம்.பி கனிமொழிக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பிறந்தநாள் வாழ்த்துக்களை தமிழில் தெரிவித்துள்ளார்.
மக்களவை உறுப்பினர் மற்றும் திமுக மகளிரணித் தலைவரான கனிமொழி, இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கனிமொழி தனது பிறந்தநாளை முன்னிட்டு தனது சகோதரரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும், திமுக தலைவர்கள், அரசியல் கட்சியினர், தொண்டர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, கனிமொழிக்கு தமிழில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'தமிழ்நாட்டின் தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி கருணாநிதி எம்.பி. அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். தாங்கள் நலமும் வளமும் பெற வாழ்த்துகிறேன். தாங்கள் தொடர்ந்து ஊக்கத்துடன் மக்கள் பணியாற்றி நாட்டின் முன்னேற்றத்துக்கு பங்களிப்பீர்கள் என நம்புகிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.