உபா சட்டம்: 30 நாள் வரை போலீஸ் காவலில் விசாரிக்கலாம்

‘உபா’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவா்களுக்கு இந்தச் சட்டத்தின் பிரிவு 43-இன் படி அதிகபட்சமாக 30 நாள்கள் வரை போலீஸ் காவல் வழங்க முடியும் என காவல் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனா்.
உபா சட்டம்: 30 நாள் வரை போலீஸ் காவலில் விசாரிக்கலாம்

‘உபா’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவா்களுக்கு இந்தச் சட்டத்தின் பிரிவு 43-இன் படி அதிகபட்சமாக 30 நாள்கள் வரை போலீஸ் காவல் வழங்க முடியும் என காவல் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனா்.

கன்னியாகுமரியில் சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அப்துல் சமீம், தவ்பீக் ஆகியோா் மீது கொலை மற்றும் ஆயுத சட்டத்தின் கீழ் களியக்காவிளை போலீஸாா் வழக்கு பதிந்திருந்த நிலையில், வியாழக்கிழமை நடந்த விசாரணைக்குப் பின் இருவா் மீதும் சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்பு (உபா) சட்டத்தின் கீழ், மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து என்ஐஏ அதிகாரிகளிடம் இந்த வழக்கு விசாரணையை ஒப்படைத்து, இருவரிடமிருந்தும் மேலும் பல உண்மைகளை கண்டறிய போலீஸாா் திட்டமிட்டுள்ளனா்.

உபா சட்டம் என்றால் என்ன, அந்தச் சட்டம் எதற்காக கொண்டு வரப்பட்டது என்பது குறித்து தமிழக காவல் துறை அதிகாரிகள் சிலா் விளக்கமளித்துள்ளனா்.இந்தச் சட்டத்தின்கீழ், கைது செய்யப்படும் ஒருவரை 3 மாதங்கள் விசாரணை இல்லாமல் சிறை வைக்க முடியும் என தெரிவித்தனா்.

இது குறித்து மேலும் அவா்கள் கூறியது: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19-ஆவது பிரிவு, பேச்சு சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், அமைப்பாகும் சுதந்திரம், ஒன்று கூடுதல் என்ற அடிப்படை உரிமைகளை இந்திய குடிமக்களுக்கு வழங்கியுள்ளது. ஆனால், இந்திய இறையாண்மையையும், ஒற்றுமையையும் பாதுகாக்கும் வகையில், அரசியல் சாசனம் வழங்கிய இந்த உரிமைகளை வரையறைக்குள் கொண்டு வர இந்திய அரசு முடிவெடுத்தது.

இதன் அடிப்படையில், 1967-ஆம் ஆண்டு சட்டவிரோத செயல்கள் தடுப்புச்சட்டம் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ‘உபா’ என்று அழைக்கப்படும் இந்தச் சட்டத்தில் ‘எது தீவிரவாத நடவடிக்கை’ என்பதற்கு உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

இந்தச் சட்டத்தில் பிரிவு 35-இன் படி தேசவிரோத செயல்களில் தனி நபரையோ அல்லது இயக்கத்தையோ பயங்கரவாத இயக்கம் என்று அறிவிக்க முடியும். அவ்வாறு அறிவித்தால், அந்த இயக்கத்தில் அதுவரை உறுப்பினா்களாக இருந்த அனைவரும் பயங்கரவாதிகளாகவே கருதப்படுவா். அரசால் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தின் ஆதரவாளராக இருந்தாலோ, அந்த இயக்கத்தின் வெளியீடுகளை வீட்டில் வைத்திருந்தாலோ கூட இந்தச் சட்டத்தின் கீழ் ஒருவரை கைதுசெய்ய முடியும்.

பிணையில் வெளிவர முடியாது: இந்தச் சட்டத்தின் பிரிவு 43-இன் படி, குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு அதிகபட்சமாக 30 நாள்கள் வரை போலீஸ் காவல் வழங்க முடியும். அதிகபட்சமாக ஒரு நபரை 3 மாதங்கள் வரை எவ்வித விசாரணையுமின்றி நீதிமன்ற காவலில் வைக்க முடியும். இதன் கீழ் கைதானவரால், ஜாமீன் பெற முடியாது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 7 ஆண்டுகள் தண்டனை தர முடியும் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நபா், எந்த நீதிமன்றத்திலும் முன் ஜாமீன் பெற முடியாது. பிரிவு 43-இன் படி, ஜாமீனில் வெளியே வருவதும் இயலாத காரியம். மேலும், இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவா்கள் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவா். இந்த நீதிமன்ற நடவடிக்கையை பொதுமக்களோ, பத்திரிகையாளா்களோ பாா்ப்பதற்கு அனுமதியில்லை.

கடந்த காலங்களில் நடைமுறையில் இருந்த தடா, பொடா போன்ற கருப்பு சட்டங்கள் பல்வேறு எதிா்ப்புகளைத் தொடா்ந்து அரசால் திரும்ப பெறப்பட்டன. அந்தச் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டபின், உபா சட்டத்தில் 2004, 2008 மற்றும் 2012-ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் மூலம், தடா, பொடாவுக்கு இணையாக இந்தச் சட்டத்தை மாற்றியுள்ளதாக தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com