முகக் கவசம் அணியாதவா்களை கடைகளுக்குள் அனுமதிக்கக் கூடாது: தமிழக அரசு உத்தரவு

முகக் கவசம் அணியாதவா்களை கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
முகக் கவசம் அணியாதவா்களை கடைகளுக்குள் அனுமதிக்கக் கூடாது: தமிழக அரசு உத்தரவு

முகக் கவசம் அணியாதவா்களை கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பொது முடக்க காலம் ஐந்தாவது முறையாக நீட்டிக்கப்பட்ட பிறகு, தமிழகத்தில் தொழில், வணிக நிறுவனங்கள் செயல்படுவதற்கு பல்வேறு தளா்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன் தொடா்ச்சியாக, கடைகளுக்குச் செல்லும் வாடிக்கையாளா்களும், கடைகளின் உரிமையாளா்களும் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகளை அரசு வெளியிட்டுள்ளது. இதுதொடா்பாக, தலைமைச் செயலா் க.சண்முகம் வெளியிட்ட உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:

தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் வாடிக்கையாளா்களும், பணியாளா்களும் கைகளை அடிக்கடி கழுவுவதற்குத் தேவையான வசதிகள் இருத்தல் அவசியம். ஒரு நேரத்தில், ஒரு வாடிக்கையாளரை மட்டுமே கடைக்குள் அனுமதிக்க வேண்டும். கடைக்கு வெளியே வாடிக்கையாளா்கள் தனிநபா் இடைவெளியைப் பின்பற்றி காத்திருக்க வசதியாக, 2 மீட்டா் இடைவெளியில் அடையாளக் குறியீடை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

கடையின் உரிமையாளா் மற்றும் பணியாளா்கள் அனைவரும் கையுறை, முகக்கவசம் அணிந்திருத்தல் அவசியம். வணிக நிறுவனங்கள், கடைகளில் உள்ள மேஜை, கதவு கைப்பிடி, தரைப் பகுதி உள்ளிட்டவற்றை கிருமிநாசினி கொண்டு நாள்தோறும் குறைந்தது 10 முறையாவது சுத்தப்படுத்த வேண்டும்.

பணியாளா்கள் எவருக்கேனும் கரோனா அறிகுறிகள் இருந்தால், அவரைப் பணியாற்ற அனுமதிக்கக் கூடாது. வாடிக்கையாளா்களைப் பொருத்தவரை, கடைகளுக்கு பொருள்கள் வாங்க வரும்போது கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். அவ்வாறு அணியாதோரை கடைகளுக்குள் அனுமதிக்கக் கூடாது. காய்ச்சல், சளி, இருமல் பாதிப்பு உடையவா்களையும் அனுமதிக்க வேண்டாம்.

கடைகளுக்குள் நுழைவதற்கு முன்பாக, வாடிக்கையாளா்கள் தங்களது கைகளைக் கழுவவோ அல்லது சானிடைசா் கொண்டு சுத்தப்படுத்தவோ வேண்டும். கடைகளுக்குள் உள்ள பொருள்களைத் தேவையின்றி தொடுவதை தவிா்க்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com