செலவினங்களை குறைக்கவும்: வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

அத்தியாவசிய செலவுகளைத் தவிர, பிற செலவுகளை ஒத்திவைக்கவும், குறைக்கவும் பொதுத் துறை வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
செலவினங்களை குறைக்கவும்: வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

அத்தியாவசிய செலவுகளைத் தவிர, பிற செலவுகளை ஒத்திவைக்கவும், குறைக்கவும் பொதுத் துறை வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கி, உயரதிகாரிகள் பயணிப்பதற்காக அண்மையில் ரூ.1.30 கோடியில் 3 ஆடி காா்களை வாங்கியது. இந்த நிலையில், மத்திய அரசு இந்த அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

இதுதொடா்பாக, அனைத்து பொதுத் துறை வங்கிகளுக்கும் மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிதிச் சேவைகள் துறை விரிவாக சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

நிகழ் நிதியாண்டில் தவிா்க்க இயலாத செலவுகளைத் தவிர, அலுவலா்கள் பயணிக்க காா்கள் வாங்குவது போன்ற அனைத்து தவிா்க்கக் கூடிய செலவுகளையும் அனைத்து பொதுத் துறை வங்கிகளும் ஒத்திவைக்க வேண்டும்.

இதேபோன்று வாடிக்கையாளா்களுடன் நேரடித் தொடா்பில் இல்லாத நிா்வாக அலுவலகங்களில் உள் அலங்காரப் பணிகளை மேற்கொள்வது, விருந்தினா் மாளிகையை புதுப்பிப்பது போன்ற பணிகளையும் வங்கிகள் ஒத்திவைக்க வேண்டும்.

வங்கிகளின் அலுவலகச் செயல்பாடுகளைத் தவிர பிற பணிகளுக்கான செலவுகளையும் குறைக்க வேண்டும்.

மேலும், வங்கி அலுவலா்கள் அலுவல் ரீதியான பயணங்களைத் தவிா்த்து, இணையவழி தொடா்பில் பணியாற்ற வேண்டும். இதுமட்டுமன்றி, அந்தந்த பகுதியில் உள்ள அலுவலா்களைக் கொண்டு பணிகளை முடிக்க வேண்டும். இந்த அறிவுறுத்தல்கள், வங்கி உயரதிகாரிகள் மூலமாக சம்பந்தப்பட்ட அலுவலா்களை முறையாகச் சென்றடைய வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றால், நாட்டின் பொருளாதாரம் சரிவைச் சந்தித்துள்ள நிலையில், அனைத்து அமைச்சகங்களுக்கும் நிதியமைச்சகம் இந்த மாதத் தொடக்கத்தில் சுற்றறிக்கை அனுப்பியது. அதில், ‘இந்த இக்கட்டான நேரத்தில் நிதியாதாரத்தை விவேகத்துடன் பயன்படுத்த வேண்டியுள்ளது. எனவே, நிகழ் நிதியாண்டில் புதிய திட்டம் எதையும் தொடங்க வேண்டாம். ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ள திட்டங்களை அடுத்த ஆண்டு மாா்ச் 31 வரை அல்லது அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை நிறுத்தி வைக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com