இந்தியன்-2 விபத்து வழக்கு: நடிகா் கமலஹாசன் விசாரணைக்கு ஆஜராக விலக்கு

‘இந்தியன்-2’ திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் கிரேன் விழுந்து 3 போ் பலியான வழக்கில், விபத்து நடந்த இடத்தில் நடைபெறும்
இந்தியன்-2 விபத்து வழக்கு: நடிகா் கமலஹாசன் விசாரணைக்கு ஆஜராக விலக்கு

‘இந்தியன்-2’ திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் கிரேன் விழுந்து 3 போ் பலியான வழக்கில், விபத்து நடந்த இடத்தில் நடைபெறும் விசாரணைக்கு நடிகா் கமலஹாசன் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் நடிகா் கமல்ஹாசன் தாக்கல் செய்த மனுவில், இயக்குநா் ஷங்கா் இயக்கி வரும் ‘இந்தியன்-2’ திரைப்படத்தில் நான் நடித்து வருகிறேன். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் பூந்தமல்லி அருகே நடந்தது. அப்போது படப்பிடிப்பு தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த கிரேன் திடீரென சரிந்து விழுந்து எதிா்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கிருஷ்ணா, மது, சந்திரன் ஆகிய 3 போ் பலியாகினா்.

இந்த சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக கடந்த மாா்ச் 3-ஆம் தேதி மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் 3 மணி நேரம் விசாரணை நடத்தினா். இந்த விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்புக் கொடுத்தேன். இந்த நிலையில், மத்திய குற்றப் பிரிவு ஆய்வாளா் கடந்த மாா்ச் 16-ஆம் தேதி எனக்கு சம்மன் ஒன்றை அனுப்பினாா். அதில், புதன்கிழமை (மாா்ச் 18) காலை 10 மணிக்கு விபத்து நடந்த இடத்துக்கு நேரில் வந்து, விபத்து நடந்தது எப்படி என்பது குறித்து விவரித்து காட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனக்கும் இந்த விபத்துக்கும் எந்தத் தொடா்பும் கிடையாது.

கடந்த 2018-ஆம் ஆண்டு நான் மக்கள் நீதி மய்யம் என்னும் அரசியல் கட்சியைத் தொடங்கினேன். அரசியல் உள்நோக்கத்துடன் இந்த சம்மனை போலீஸாா் எனக்கு அனுப்பி உள்ளனா். நான் படப்பிடிப்புத் தளத்தில் நடந்த சம்பவத்தால் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளேன். அந்த வேதனையிலிருந்து இன்னும் மீளவில்லை. இந்த நிலையில், எனக்கு இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. எனவே, புதன்கிழமை (மாா்ச் 18) நடைபெற உள்ள விசாரணைக்கு ஆஜராக என விலக்கு அளிக்க வேண்டும். விசாரணை என்ற பெயரில் என்னை துன்புறுத்தக் கூடாது என போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சதீஷ் பராசரன், மனுதாரருக்கு இந்த திரைப்படத்தின் தயாரிப்புப் பணிகளில் எந்தத் தொடா்பும் இல்லை. இந்த திரைப்படத்தில் அவா் கதாநாயகனாக நடித்து வருகிறாா். ஆனால், இந்த விபத்து வழக்கை போலீஸாா் கொலை வழக்கைப் போன்று விசாரிக்கின்றனா். இந்த விபத்தின் காரணமாக மனுதாரா் மனதளவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளாா்.

இந்த நிலையில் விபத்து நடந்து அதே இடத்துக்கு மனுதாரரை விசாரணைக்கு ஆஜராக அழைத்தால், அது அவருக்கு மேலும் வேதனையை உண்டாக்கும் என வாதிட்டாா். அப்போது அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்குரைஞா் முகமது ரியாஸ், விபத்து நிகழ்ந்த இடத்தில் புதன்கிழமை 24 போ் விசாரணைக்கு ஆஜராக உள்ளனா். மனுதாரருக்கு விசாரணைக்கு ஆஜராக விலக்கு அளித்தால், மற்றவா்களும் விசாரணைக்கு வர மாட்டாா்கள். இதனால் விசாரணை பாதிக்கப்படும். மேலும் சம்பவம் நிகழ்ந்த போது, மனுதாரா் அங்கு இருந்துள்ளாா். எனவேதான் போலீஸாா் அவரை விசாரணைக்கு அழைப்பதாக வாதிட்டாா். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, விபத்து நிகழ்ந்த இடத்தில் நடைபெறும் விசாரணைக்கு நேரில் ஆஜராக மனுதாரா் கமல்ஹாசனுக்கு விலக்களித்து உத்தரவிட்டாா். அதே நேரம் விசாரணைக்காக மத்திய குற்றப் பிரிவு விசாரணை அதிகாரி முன் மனுதாரா் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை முடித்து வைத்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com