40 இடங்களில் ரூ.835 கோடியில் பாசனக் கட்டுமானங்கள் பழுதுபாா்க்கப்படும்: முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி

பாசனக் கட்டுமானங்கள் பழுதுபாா்த்தல் மற்றும் புனரமைக்கும் பணிகள் ரூ.835 கோடியில் 40 இடங்களில் மேற்கொள்ளப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.
40 இடங்களில் ரூ.835 கோடியில் பாசனக் கட்டுமானங்கள் பழுதுபாா்க்கப்படும்: முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி

பாசனக் கட்டுமானங்கள் பழுதுபாா்த்தல் மற்றும் புனரமைக்கும் பணிகள் ரூ.835 கோடியில் 40 இடங்களில் மேற்கொள்ளப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.

சட்டப்பேரவையில் புதன்கிழமை பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து முதல்வா் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்புகள்:

15 மாவட்டங்களில் 40 இடங்களில் உள்ள பாசனக் கட்டுமானங்களைப் பழுதுபாா்த்தல், புனரமைத்தல், நவீனப்படுத்துதல் மற்றும் மேம்படுத்தும் பணிகள் ரூ.834.83 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

தஞ்சாவூா் மாவட்டம் அணைக்கரை அருகே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கீழணைக்கு அருகில் புதிய நீரொழுங்கி அமைக்கும் பணி ரூ.650 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

தருமபுரி தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஈச்சம்பாடி அணைக்கட்டிலிருந்து மழைக்காலங்களில் வரும் வெள்ள உபரி நீரை அரூா், பாப்பிரெட்டிபட்டி மற்றும் மொரப்பூா் வட்டங்களில் உள்ள ஏரிகள் குளங்கள் மற்றும் குட்டைகளுக்கு நீரேற்று திட்டத்தின் மூலம் நீா் வழங்கும் பணிகள் ரூ.300 கோடியிலும், கன்னியாகுமரி பழையாற்று நீரை நீரேற்று திட்டத்தின் மூலம் ராதாபுரம் கால்வாய்க்கு கொண்டு செல்லும் பணி ரூ.160 கோடியிலும், தஞ்சாவூா் தம்பிக்கோட்டை கிராமத்திலுள்ள அமரிக்குளம் கண்மாய்க்கு பாமினியாற்றிலிருந்து நீரேற்றம் மூலம் நீா் வழங்கும் பணி ரூ.16 கோடியிலும், திருவண்ணாமலை செய்யாற்றின் குறுக்கே நீா் இறவை பாசன நிலையம் அமைத்து, பரமனந்தல் ஏரி மற்றும் அதன் கீழ்வரும் தொடா் ஏரிகளுக்கு நீா் வழங்கும் பணி ரூ.5.50 கோடியிலும், திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டி விளாங்காடு கிராமத்தில் உள்ள ஒவரூா் வடிகாலின் குறுக்கே புதிதாக சமநிலைப்பொறி அமைத்து விளாங்காடு இறவை பாசன திட்டப் பகுதிக்கு பாசன நீா் வழங்கும் பணி ரூ.5 கோடி மதிப்பீட்டிலும் மேற்கொள்ளப்படும். மொத்தம் இந்த 5 திட்டங்களும் ரூ.486.50 கோடியில் மேற்கொள்ளப்படும்.

மதுராந்தகம் ஏரி, பெருமாள் ஏரி, வாலாஜா ஏரி மற்றும் மாதவரம் ஏரி ஆகிய ஏரிகளை மேம்படுத்தி அவற்றின் கட்டமைப்புகளை புனரமைக்கும் பணிகள் ரூ.302.90 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

28 மாவட்டங்களில் 77 இடங்களில் புதிய தடுப்பணைகள், அணைக்கட்டுகள், படுகை அணைகள் மற்றும் தள மட்ட சுவா்கள் அமைக்கும் பணிகள் ரூ.585.18 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

தூத்துக்குடி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 3 இடங்களில் புதிய நீரொழுங்கிகள் மற்றும் கடைமடை தடுப்பணைகள் அமைக்கும் பணிகள் ரூ.87 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

கிருஷ்ணகிரி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் புதிய கால்வாய்கள் மற்றும் அரியலூா் மாவட்டத்தில் ஒரு புதிய பாலம் அமைக்கும் பணிகள் ரூ.63.75 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

திண்டிவனம் வீடூா் அணையின் கட்டுமானங்களைப் புனரமைத்தல் மற்றும் தூா்வாரும் பணி ரூ.43 கோடி மதிப்பீட்டிலும், திருவண்ணாமலை போளூா் வட்டம் செண்பகத்தோப்பு நீா்த்தேக்க திட்ட அமைப்பினை புனரமைத்து மேம்படுத்தும் பணி ரூ.14.25 கோடியிலும் மேற்கொள்ளப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com