திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயில் மூடப்படுகிறது: மாவட்ட ஆட்சியர் தகவல்

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயில் மறு உத்தரவு வரும் வரை மூடப்படுவதாகவும், வழக்கமான பூஜைகள் நடைபெறும் எனவும்  பக்தர்கள் ஒத்துழைப்புத் தரவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது
ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயில் மூடல்
ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயில் மூடல்

காரைக்கால் :  திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயில் மறு உத்தரவு வரும் வரை மூடப்படுவதாகவும், வழக்கமான பூஜைகள் நடைபெறும் எனவும்  பக்தர்கள் ஒத்துழைப்புத் தரவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்ட ஆட்சியரும், திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயில் தனி அதிகாரியுமான அர்ஜூன் சர்மா செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது :

புதுச்சேரி முதல்வர் அலுவலகத்தின் அறிவுறுத்தலின்பேரில், கூட்டமாக பக்தர்கள் கோயில்களில் கூடுவதை தவிர்ப்பதன் மூலம் கரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியும் என்பதை கருத்தில்கொண்டு, திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலும் மறு உத்தரவு வரும் வரை  தற்காலிகமாக மூடப்படுகிறது. வாரத்தில் சனிக்கிழமை மட்டும் சுமார் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை பக்தர்கள் இக்கோயிலில் தரிசனம் செய்கின்றனர். எனவே இந்த நடவடிக்கை அவசியமாகிறது.

கோயிலில் நடைபெறும் வழக்கமான பூஜைகள் தொடர்ந்து நடத்தப்படும். பக்தர்கள் தபால் மூலம் கட்டளை அர்ச்சனை செய்யும் வகையில் பதிவு செய்யலாம். இதற்காக கோயில் இணையதள முகவரியில் விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இதற்கான பிரசாதம் அனுப்பிவைக்கப்படும். இந்த நடவடிக்கைகளுக்கு பக்தர்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என கோயில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கூட்டமாக மக்கள் இருக்கும்போதுதான் எளிதில் கரோனா வைரஸ் பரவுகிறது என்பதாலேயே வழிபாட்டுத் தலங்களில் நடக்கக்கூடிய விழாக்கள் பலவும் தற்காலிகமாகத் தள்ளிவைக்கப்படுகிறது என்றார் ஆட்சியர். மேலும் அவர் கூறும்போது, காரைக்காலில் இதுவரை யாருக்கும் கரோனா தொற்று ஏற்படவில்லை என்றார். பேட்டியின்போது கோயில் நிர்வாக அதிகாரி எம்.ஆதர்ஷ் உடனிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com