வேடந்தாங்கலில் குவியும் பறவைகள்: ரசிக்க இயலாத நிலையில் ஆர்வலர்கள்

வேடந்தாங்கல் ஏரியில் பறவைகள் குவிந்துள்ள நிலையில், ஊரடங்கு உத்தரவால் பறவைகளைப் பார்க்க சுற்றுலாப் பயணிகள் வர இயலாமல் பறவைகள் சரணாலயம் ஆள் அரவமின்றிக் காணப்படுகிறது. 
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் குவிந்துள்ள பறவைகள் (கோப்பு படம்).
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் குவிந்துள்ள பறவைகள் (கோப்பு படம்).


மதுராந்தகம்: வேடந்தாங்கல் ஏரியில் பறவைகள் குவிந்துள்ள நிலையில், ஊரடங்கு உத்தரவால் பறவைகளைப் பார்க்க சுற்றுலாப் பயணிகள் வர இயலாமல் பறவைகள் சரணாலயம் ஆள் அரவமின்றிக் காணப்படுகிறது. 

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாப் பகுதியாக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் திகழ்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் கண்டுகளிக்கும் இடமாக இது இருந்து வருகிறது. 

ஏரிகள் நிறைந்த செங்கல்பட்டு மாவட்டத்தின் முக்கிய ஏரியாக உள்ளது வேடந்தாங்கல் ஏரி. இங்குள்ள பறவைகள் சரணாலயம் கடந்த 1858}இல் தொடங்கப்பட்டது. 

சுமார் 75 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியின் நடுவே 50}க்கும் மேற்பட்ட கருவேல மரங்களும், கடம்ப மரங்களும், செடி கொடிகளும் உள்ளன. அந்த மரங்களின் மீது கூடு கட்டி, இனப்பெருக்கம் செய்ய உலகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பறவைகள் வருகின்றன. 

இனப்பெருக்கத்துக்கு சாதகமான பருவநிலை, நீர், உணவு, பாதுகாப்பான சூழ்நிலை போன்ற காரணங்களால் பறவைகள் இங்கு வருகின்றன. வேடந்தாங்கல் ஏரியைச் சுற்றி மதுராந்தகம் ஏரி, வேடவாக்கம் ஏரி, கருங்குழி ஏரி உள்ளிட்ட ஏரிகள் அரணாக அமைந்துள்ளன. 

சைபீரியா, இலங்கை, மத்திய ஆசியா, பாகிஸ்தான், சிங்கப்பூர், மங்கோலியா, வங்கதேசம் போன்ற வெளிநாடுகளில் இருந்தும், இந்திய நாட்டின் வடமாநிலங்களில் இருந்தும் பல வகையான பறவைகள் பல்லாயிரக்கணக்கான மைல்களைத் தாண்டி இங்கு வந்து தங்கிச் செல்கின்றன. 

சிறிய நீர்க்காகம், பாம்புதாரா, கரண்டி வாயன், சின்ன சீழ்க்கை சிறவி, புள்ளிகூழைக்கடா, நத்தைக்குத்தி நாரை உள்ளிட்ட பல்வேறு வகையிலான பறவைகள் இங்கு வருகின்றன.

இந்த ஏரியை சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக இருப்பதால், விளை நிலங்களில் பயிரிடப் படும் நெல், பருப்பு வகைகளையும், நீர்நிலைகளில் வாழும் மீன், புழு, பூச்சிகள் என்று சரணாலயத்தில் முகாமிடும் பறவைகளுக்கு உணவுப் பஞ்சமிருக்காது. 

இப்பறவைகளின் எச்சம் மிகச் சிறந்த உரமாகிறது. வேடந்தாங்கல் பகுதி விவசாயிகள் இந்த ஏரி நீர்ப் பாசனத்தின் மூலம் நல்ல விளைச்சலை பெறுகின்றனர். அக்டோபர் மாதம் முதல் மே மாதம் வரை பறவைகளைக் கண்டுகளிப்பதற்கான காலமாகும்.

வேடந்தாங்கலில் தற்போது 32,061 பறவைகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல வேடந்தாங்கல் கிராமத்துக்கு அருகில் உள்ள கரிக்கிலி என்ற கிராமத்தில் 2,367 பறவைகள் உள்ளன.  ஏராளமான பறவைகள் இருந்தாலும், ஊரடங்கு உத்தரவு காரணமாக பறவைகளைக் காண சுற்றுலா பயணிகள் வர முடியாத சூழல் காணப்படுகிறது. 

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 25 }ஆம் தேதி முதல் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு வனத் துறையினர் தடைவிதித்தனர். இதனால்  சரணாலயம் ஆள் அரவமின்றிக் காணப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com