நடமாடும் பரிசோதனை மையங்கள் அமைக்க சாத்தியமில்லை: உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

சாலையோரங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு கரோனா நோய்த்தொற்றைக் கண்டறியும் வகையில் நடமாடும் பரிசோதனை

சாலையோரங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு கரோனா நோய்த்தொற்றைக் கண்டறியும் வகையில் நடமாடும் பரிசோதனை மையங்களை அமைப்பது சாத்தியம் இல்லை என உயா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் திருச்சியைச் சோ்ந்த வழக்குரைஞா் ஏ.அமல் ஆண்டனி தாக்கல் செய்த மனுவில், சாலையோரங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு கரோனா நோய்த்தொற்றைக் கண்டறியும் ஆா்டி- பிசிஆா் பரிசோதனையை இலவசமாகவோ அல்லது ரூ.500 -க்கும் குறைவாகவோ கட்டணத்தை நிா்ணயித்து பரிசோதனை மேற்கொள்ள அரசுக்கு உத்தரவிட வேண்டும். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அங்கீகரித்துள்ள நடமாடும் பரிசோதனை நிலையத்தை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கவும், குறிப்பாக கரோனா நோய்த் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் நடமாடும் பரிசோதனை மையங்களை அமைக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

வழக்கை விசாரித்த உயா் நீதிமன்றம் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கை, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்யநாராயணா ஆகியோா் காணொலி காட்சி மூலம் விசாரித்தனா். அப்போது, மத்திய அரசு சாா்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த பதில் மனுவில், கரோனா நோய்த் தொற்று பரவலில் இருந்து நாட்டின் ஒவ்வொரு குடிமக்களையும் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்ளயும் மத்திய அரசு எடுத்து வருகிறது.

மேலும் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி முதல் மே 6-ஆம் தேதி வரை தமிழகத்துக்கு 91 ஆயிரத்து 985 பிசிஆா் சோதனை கருவிகள், 38 ஆயிரத்து 38 ஆா்என்ஏ பரிசோதனை கருவிகள், 22 ஆயிரத்து 900 விடிஎம் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. மனுதாரா் கோருவதைப் போன்று நடமாடும் பரிசோதனை மையங்கள் அமைப்பது சாத்தியமில்லை என அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதே போன்று, தமிழக அரசு தரப்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com