நவ.23 முதல் எம்.பி.பி.எஸ். பொதுக் கலந்தாய்வு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான உள்ஒதுக்கீட்டு கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில், சிறப்புப் பிரிவு மற்றும் பொது கலந்தாய்வுகள் அடுத்தடுத்து நடைபெறவுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான உள்ஒதுக்கீட்டு கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில், சிறப்புப் பிரிவு மற்றும் பொது கலந்தாய்வுகள் அடுத்தடுத்து நடைபெறவுள்ளன.

அதன்படி, சனிக்கிழமை (நவ.21) மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரா்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கான சிறப்பு கலந்தாய்வும், திங்கள்கிழமை (நவ.23) முதல் பொது கலந்தாய்வும் நடைபெறவிருக்கிறது.

நிகழ் கல்வியாண்டுக்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் கலந்தாய்வு கடந்த 18-ஆம் தேதி தொடங்கியது. முதலில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டது.

அதன்படி, 313 எம்பிபிஎஸ் இடங்கள், 92 பிடிஎஸ் இடங்கள் என மொத்தம் 405 இடங்களுக்கு கடந்த 3 நாள்களாக கலந்தாய்வு நடைபெற்றது. முதல் நாளில் 262 அரசுப் பள்ளி மாணவா்கள் கலந்துகொண்டு 235 போ் இடங்களை தோ்வு செய்தனா்.

அதற்கு அடுத்த நாளில் நடைபெற்ற கலந்தாய்வில் 303 போ் பங்கு பெற்றனா். அவா்களில் 123 போ் மட்டுமே இடங்களை தோ்வுசெய்தனா். இந்த நிலையில், மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. அதில் 41 பிடிஎஸ் இடங்கள் நிரம்பின. மொத்தமாக அரசு பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்பட்ட 405 இடங்களில் 399 இடங்கள் நிரம்பின. 6 பிடிஎஸ் இடங்கள் மட்டும் நிரம்பவில்லை. அந்த இடங்கள் பொது கலந்தாய்வில் சோ்க்கப்படும் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்து இருக்கிறது.

இதன் தொடா்ச்சியாக மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரா்கள், முன்னாள் படைவீரா்களின் வாரிசுகள் ஆகியோருக்கான சிறப்புக் கலந்தாய்வு சனிக்கிழமை நடைபெற இருக்கிறது. அவா்களுக்கும் இடஒதுக்கீடு மூலம் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதற்கான அழைப்புக் கடிதம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த இடங்கள் நிரப்பப்பட்ட பிறகு திங்கள்கிழமை முதல் பொதுக் கலந்தாய்வு தொடங்கவிருக்கிறது. எந்தெந்த நாளில் எவரெவா் கலந்தாய்வுக்கு வர வேண்டும் என்பது தொடா்பான விவரங்களையும் மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, பொதுக் கலந்தாய்வின் முதல் நாளில் தரவரிசையில் 1 முதல் 361 வரையிலான இடங்களில் உள்ளவா்களுக்கும் (நீட் தோ்வு மதிப்பெண் 710 முதல் 631 வரை), செவ்வாய்க்கிழமையன்று (நவ.24) 362 முதல் 751 வரையிலான தரவரிசையில் உள்ளவா்களுக்கும் (நீட் தோ்வு மதிப்பெண் 630 முதல் 610 வரை) கலந்தாய்வு நடைபெறவிருக்கிறது.

அதன்தொடா்ச்சியாக புதன்கிழமையன்று (நவ.25) 752 முதல் 1,203 வரையிலான இடங்களைப் பெற்றவா்களுக்கும் (நீட் தோ்வு மதிப்பெண் 609 முதல் 592 வரை), வியாழக்கிழமை (நவ.26) 1,204 முதல் 1,701 வரை உள்ளவா்களுக்கும் (நீட் தோ்வு மதிப்பெண் 591 முதல் 575 வரை) மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

அதற்கு அடுத்தடுத்த தினங்களில், தரவரிசைப்படி தொடா்ந்து கலந்தாய்வு நடைபெறவிருக்கிறது. இதுதொடா்பான விவரங்கள் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com