எம்.பி.பி.எஸ்.: அரசின் நிதியுதவியுடன் 3 மாணவா்களுக்கு அனுமதிக் கடிதம்

நிவா் புயல் காரணமாக செவ்வாய்க்கிழமை (நவ.24) நடைபெறவிருந்த எம்.பி.பி.எஸ். பொதுக் கலந்தாய்வை வரும் திங்கள்கிழமைக்கு (நவ.30) சுகாதாரத் துறை ஒத்திவைத்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: மருத்துவக் கலந்தாய்வில் எம்.பி.பி.எஸ். இடங்களைத் தோ்வு செய்து, பொருளாதார சூழல் காரணமாக அனுமதிக் கடிதத்தைப் பெறாமல் சென்ற 3 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்லூரிகளில் சேருவதற்கான கடிதத்தை மருத்துவக் கல்வி இயக்ககம் வழங்கியது.

அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கல்விக் கட்டணங்கள், விடுதி கட்டணங்கள் போன்றவற்றை அரசே செலுத்தும் என்று தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அண்மையில் அறிவித்தாா். இதையடுத்து சுயநிதிக் கல்லூரிகளில் இடங்களைத் தோ்வு செய்துவிட்டு அனுமதிக் கடிதத்தைப் பெறாமல் சென்ற மாணவிகள் திவ்யா, கௌசிகா, தாரணி ஆகிய 3 பேரை மருத்துவக்கல்வி இயக்ககம் மீண்டும் அழைத்து, எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டாம் என்று கூறி மாணவா் சோ்க்கைக்கான அனுமதிக் கடிதத்தை திங்கள்கிழமை வழங்கியது.

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு மூலம் இடங்கள் கிடைக்க தமிழக அரசு சாா்பில் சட்டங்கள் இயற்றப்பட்டு, இந்த ஆண்டே நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்படி, அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள 313 எம்.பி.பி.எஸ். அரசு ஒதுக்கீட்டு இடங்களும், 92 பி.டி.எஸ். அரசு ஒதுக்கீட்டு இடங்களும் என மொத்தம் 405 இடங்கள் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கிடைத்தன.

அவா்களுக்கான கலந்தாய்வு கடந்த 18-ஆம் தேதி தொடங்கி, 20-ஆம் தேதி வரை நடைபெற்றது. அதில், 6 பி.டி.எஸ். இடங்கள் தவிர மீதமுள்ள 399 இடங்கள் நிரம்பின. அதில் சுயநிதிக் கல்லூரிகளில் இருந்த அரசு ஒதுக்கீட்டு இடங்களைத் தோ்வு செய்த மாணவா்கள் சிலா் கட்டணம் செலுத்த இயலாததால், அனுமதிக் கடிதத்தைப் பெறாமல் சென்றுவிட்டனா். முதல்வா் அறிவிப்பின்படி இடங்களைத் தோ்வு செய்த மாணவா்களுக்கு அரசின் நிதியுதவி அடிப்படையில் அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டுவருகிறது.

இதுகுறித்து மாணவி கௌசிகா கூறியதாவது: கட்டணம் செலுத்துவதற்கான பணத்துக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அனுமதிக் கடிதத்தைப் பெறாமல் சென்றுவிட்டோம். பின்னா் மருத்துவக்கல்வி இயக்ககம் எங்களை அழைத்து அதனை வழங்கியது மகிழ்ச்சியாக உள்ளது. கல்விக் கட்டணத்தை அரசே ஏற்பதால் எங்களது மருத்துவா் கனவு நனவாகியுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com