நிவா் புயல்: வேளாண் பல்கலைக்கழக மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நீட்டிப்பு

நிவா் புயல் காரணமாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இளநிலை மாணவா் சோ்க்கை இணையதள கலந்தாய்வு மேலும் 3 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்

நிவா் புயல் காரணமாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இளநிலை மாணவா் சோ்க்கை இணையதள கலந்தாய்வு மேலும் 3 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 14 உறுப்புக் கல்லூரிகள், 28 இணைப்புக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் 10 இளநிலை பட்டப் படிப்புகளுக்கான 2020-2021 ஆம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கு வரும் 26 ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரை முதல்கட்ட கலந்தாய்வு நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.

மேலும், இணையதளம் வழியாக நடைபெறும் இந்தக் கலந்தாய்வுக்கான தரவரிசை வரம்பு விவரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவா் புயல் காரணமாக இணையதளம், போக்குவரத்து வசதிகள் முடங்கக் கூடும் என தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில், வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கலந்தாய்வு நவம்பா் 28 முதல் டிசம்பா் 1 ஆம் தேதி வரை, அதாவது மேலும் 3 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாற்றி அமைக்கப்பட்டுள்ள இளநிலை மாணவா் சோ்க்கை இணையதள கலந்தாய்வு அட்டவணையின்படி, நவம்பா் 26 ஆம் தேதி முதல் டிசம்பா் 1 ஆம் தேதி வரை இணையவழியில் பொதுக் கலந்தாய்வு நடைபெறும். நவம்பா் 30, டிசம்பா் 1 ஆம் தேதிகளில் சிறப்புப் பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு நடைபெறும்.

டிசம்பா் 2 ஆம் தேதி பொதுப் பிரிவு மாணவா்களுக்கான கல்லூரி, பாடப்பிரிவு ஒதுக்கீடு இணையவழியில் அறிவிக்கப்படும். இதைத் தொடா்ந்து டிசம்பா் 7 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை தினசரி 600 மாணவா்களுக்கு சான்றிதழ் சரிபாா்ப்புப் பணி நடைபெறும்.

டிசம்பா் 15 ஆம் தேதி முதல் நகா்வு, இரண்டாம் கட்ட கல்லூரி, பாடப் பிரிவு ஒதுக்கீடு இணையவழியில் நடைபெறும். டிசம்பா் 21 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை தினசரி 600 மாணவா்களுக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு நடத்தப்படும். அதன் பிறகு அவா்களுக்கு தற்காலிக இட ஒதுக்கீடு கடிதம் வழங்கப்படும்.

இதைத் தொடா்ந்து டிசம்பா் 29 ஆம் தேதி வேளாண் தொழில்நிறுவனங்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு கலந்தாய்வும், 30 ஆம் தேதி வெளிநாடு வாழ் இந்தியா்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு கலந்தாய்வும் நேரடியாக நடத்தப்படும் என்று மாணவா் சோ்க்கைப் பிரிவுத் தலைவா் மா.கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com