விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் யுத்தத்தை முறியடிப்போம்: இரா. முத்தரசன்

ஏங்கல்ஸ் 200வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப் படத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் இரா.முத்தரசன், மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ஏங்கல்ஸ் 200வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு அவரது படத்துக்கு மாலை அணிவித்த இரா.முத்தரசன்
ஏங்கல்ஸ் 200வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு அவரது படத்துக்கு மாலை அணிவித்த இரா.முத்தரசன்

ஏங்கல்ஸ் 200வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி பெரிய மிளகு பாறையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் இரா.முத்தரசன், அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து, பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது அவர் கூறியது:

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்தல் என இறுதியில் ஒரே கட்சி ஒரே ஆட்சி என்கிற சர்வாதிகார நிலைக்கு நாட்டை கொண்டு செல்ல மத்திய பாஜக தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது நாட்டிற்கும் ஜனநாயகத்திற்கும் ஆபத்து. இதை முறியடிக்கக் கூடிய வகையில் அனைத்து  ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைந்து போராட முன்வர வேண்டும்.

இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் ஒரு போதும் மக்களின் இழப்பை ஈடு செய்யாது. அடிப்படையில் செய்ய வேண்டிய பாதுகாப்பு அம்சங்களை அரசு முன்கூட்டியே மேற்கொள்ள வேண்டும்.

மருத்துவ மேற்படிப்பிற்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை இந்தாண்டு நடைமுறைப்படுத்த முடியாது என உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. மத்திய அரசின் நிர்ப்பந்தத்தின் மூலம் உச்சநீதிமன்றம் இதைக் கூறியுள்ளது. இது போன்ற செயல்கள் இட ஒதுக்கீடு என்பதை முழுமையாக இல்லாமல் செய்யும் முயற்சி. இது சமூக நீதிக்கு எதிரானது, இதை எதிர்த்தும் மக்கள் போராட வேண்டும். 

ஒரே தேர்தல் என்பது நடைமுறை சாத்தியமில்லாதது. நாடு முழுவதும் வெவ்வேறு நேரங்களில் தேர்தல் நடத்துவதால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுகிறது என பிரதமர் கூறுவது வெறும் காரணங்கள் தான். ஆனால் அவர்களின் நோக்கம் என்பது வேறு.

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு  யுத்தத்தை நடத்துகிறது. அந்த யுத்தத்திற்கு எதிராக விவசாயிகள் போராடுகிறார்கள். பல அடக்குமுறைகளைக் கடந்தும் விவசாயிகள் போராடிய காரணத்தால் வரும் 3 ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள். விவசாயிகளுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை போராட்டங்கள் தொடரும் எனக் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com